Saturday, October 27, 2012

தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது!

Saturday, October 27, 2012
சென்னை::வைரவிழா நிகழ்வுகள் உள்ளிட்டவை தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க, முதல்வர் தலைமையில், தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது. தமிழக சட்டசபையின் வைரவிழா, அடுத்த மாதம் 30ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. துணை சபாநாயகர் தேர்தலுக்காக, இம்மாதம் 29ம் தேதி சட்டசபை கூடுகிறது. தொடர்ந்து, சில நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் என்றும் தெரிகிறது.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று பகல், தலைமைச் செயலகத்தில் நடக்கிறது. சட்டசபை வைர விழாவிற்கு, ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியை, சபாநாயகர் தனபால், தமிழக நிதியமைச்சர் பன்னீர் செல்வம், மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர், நேரில் சந்தித்து அழைத்துள்ளனர். விழாவிற்கு ஜனாதிபதி வரும் பட்சத்தில், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும், அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு, அதற்கான குழுக்களும் அமைக்கப்பட உள்ளன. மேலும், விரைவில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலுக்காக, தேர்தல் ஆணையம் ஒன்றை அமைக்கலாம் என, முடிவெடுக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான ஒப்புதல் இந்த அமைச்சரவையில் பெறப்படும் என்று கூறப்படுகிறது. இது தவிர, தமிழகத்தின் மின் நிலையை சீரமைப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கான ஒப்புதலும், இதில் பெறப்படும் என தெரிகிறது.

No comments:

Post a Comment