Sunday, October 28, 2012

தே.மு.தி.க.வில் பிளவு: மேலும் எம்.எல்.ஏக்கள் அணி 'தாவ' முடிவு!

Sunday, October 28, 2012
சென்னை::அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து கடந்த தேர்தலில் தே.மு.தி.க. 29 தொகுதிகளை கைப்பற்றியது. கட்சி தொடங்கி குறுகிய காலத்திலேயே 29 எம்.எல்.ஏக்களை பெற்று தமிழக சட்டசபையில் பிரதான எதிர்கட்சி என்ற அந்தஸ்தையும் பெற்றது.

தேர்தலில் அ.தி.மு.க.வும், தே.மு.தி.க.வும் கை கோர்த்தாலும் இரு கட்சிகளுக்கிடையேயும் இணக்கமான சூழ்நிலை தொடரவில்லை. ஆளுங்கட்சியை விஜயகாந்த் கடுமையாக விமர்சித்தார். அதே நேரத்தில் தொகுதிகளில் எந்த வேலையும் நடக்கவில்லை. எம்.எல்.ஏக்களாக வெற்றி பெற்றும் எந்த பிரயோஜனமும் இல்லை என்று பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் ஆதங்கத்தில் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சுந்தரராஜன், தமிழழகன் ஆகிய இரு எம்.எல்.ஏ.க்களும் நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்தார்கள். அந்த பரபரப்பு அடங்கு வதற்குள் நேற்றும் அருண் பாண்டியன், மைக்கேல் ராயப்பன் ஆகிய இரு எம்.எல்.ஏக்கள் முதல்-அமைச்சரை சந்தித்தார்கள். இந்த 4 எம்.எல்.ஏக்களின் தடாலடி நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிருப்தியில் இருக்கும் எம்.எல்.ஏக்களால் தே.மு.தி.க. வில் பிளவு ஏற்பட்டுள்ளது. மேலும் சில எம்.எல்.ஏக்கள் அணி தாவ முடிவு செய்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவர்களும் நாளை ஜெயலலிதாவை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதாவை சந்திக்கும் அடுத்த பட்டியலில் ஒரு பெண் எம்.எல்.ஏ. உள்பட 5 பேர் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தே.மு.தி.க.வில் இருந்து 10 எம்.எல்.ஏ.க்கள் விலகினால் அவர்கள் மீது கட்சி தாவல் தடைசட்டம் பாயாது. எனவே 10 எம்.எல்.ஏ.களுக்கு மேல் கூட்டாக வெளியேற முயற்சித்து வருகிறார்கள்.

விரைவில் தமிழ்நாட்டை சேர்ந்த 6 மேல்சபை எம்.பி.க் கள் பதவி காலியாகிறது. அதில் ஒரு எம்.பி. சீட்டை கைப்பற்ற விஜயகாந்த் திட்டமிட்டு இருந்தார். இதற்கு 35 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. தன்னிடம் இருக்கும் 29 எம்.எல்.ஏ.க்களுடன் 10 எம்.எல்.ஏக்களை கொண்ட மார்க்சிஸ்டு கட்சி ஆதரவையும் பெற்று எம்.பி. சீட்டை கைப்பற்ற விஜய காந்த் வியூகம் வகுத்தார். ஆனால் இப்போது அந்த கனவு தகர்ந்து வருவது கண்கூடாக தெரிகிறது.

4 எம்.எல்.ஏக்கள் விலகியதால் தற்போது தே.மு.தி.க.வின் பலம் 25ஆக குறைந்துள்ளது. மேலும் எம்.எல்.ஏ.க்கள் அணி தாவும் படலம் தொடர்ந்தால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் தே.மு.தி.க. இழக்க நேரிடும்.

No comments:

Post a Comment