Sunday, October 28, 2012
இலங்கை::புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் பற்றிய தகவல்களை இந்தியாவிற்கு தெரிவிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு காவல்துறையைச் சாரும் என ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச காவல்துறையின் உறுப்பினர் என்ற வகையில் இலங்கை காவல்துறையினர் குமரன் பத்மநாதன் பற்றிய தகவல்களை இந்தியாவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
சர்வதேச பயங்கரவாதம் மற்றும் ஏனைய பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கைக் காவல்துறையினர், சர்வதேச காவல்துறையினரின் ஒத்துழைப்புப் பெற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக் காவல்துறையினருக்கும், சர்வதேச காவல்துறையினருக்கும் இடையில் மிக நெருங்கிய பிணைப்பு காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
குமரன் பத்மநாதனை சர்வதேச காவல்துறையினர் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளின் பட்டியலில் இணைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். குமரன் பத்மநாதன் கைது தொடர்பில் இந்தியா திறந்த பிடிவிராந்து உத்தரவு ஒன்றிணையும் பிறப்பித்திருந்ததாகத் தெரிவித்துள்ளர்.
புலிகள் பாரியளவு அப்பாவிகளை படுகொலை செய்துள்ளதாக ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார். குமரன் பத்மநாதனுக்கு எதிரான பிடிவிராந்து உத்தரவினை பாராளுமன்றில் தாம் சமர்ப்பித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோனுக்கு அனுப்பி வைத்த கடிதத்தில், ஜயலத் ஜயவர்தன இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சர்வதேச காவல்துறையினரால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவிராந்து உத்தரவினை இந்தியாவினால் மட்டுமே வாபஸ் பெற்றுக்கொள்ள முடியும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். இந்தியாவின் கோரிக்கைக்கு அமையவே பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment