Sunday, October 28, 2012

ஆட்சியின் போது வரி மோசடி : இத்தாலி முன்னாள் பிரதமருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை!

Sunday, 28 October 2012
ரோம்::இத்தாலியில் பிரதமராக இருந்த சில்வியோ பெர்லுஸ்கோனி (76), அதிகார துஷ்பிரயோகம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இத்தாலியில் பொருளாதார நெருக்கடி ஏற்பட காரணமாக இருந்ததாகவும், தான் சொந்தமாக நடத்தி வரும் மீடியாக்களுக்கு சாதகமாக செயல்பட்டதாகவும் பரபரப்பு புகார் எழுந்தது. இதையடுத்து பெர்லுஸ்கோனி பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இவர் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மிலன் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்தது.

பெர்லுஸ்கோனி மீதான வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், இவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அத்துடன், 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவும் தடை விதித்தது. இத்தாலி சிறைகளில் நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக, கடந்த 2006ம் ஆண்டு குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கவும், அதன் மூலம் தண்டனை காலத்தை குறைக்கவும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டத்தின்படி, பெர்லுஸ்கோனிக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனையை ஓராண்டாக நீதிமன்றம் குறைத்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்படும் என்று பெர்லுஸ்கோனியின் வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment