Sunday, October 28, 2012

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பிரதேசத்தில் நேற்று மாலை கைக்குண்டொன்று வெடித்ததில் 10 வயது சிறுமி ஒருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒரு பெண் காயம்!

Sunday, 28 October 2012
இலங்கை::முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பிரதேசத்தில்  நேற்று மாலை கைக்குண்டொன்று வெடித்ததில் 10 வயது சிறுமி ஒருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒரு பெண் காயமடைந்துமுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்தது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவிக்கையில்:-

புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்த 10 வயதுடைய பெண்பிள்ளையொருவர் தமது காணியில் சுத்திகரிப்பு வேலையில் ஈடுபட்டிருந்தபோது இக்கைக்குண்டு வெடித்துள்ளது. இவ்வெடிப்பினால் படுகாயமடைந்த குறித்த சிறுமி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, வீட்டிலிருந்த மற்றுமொரு பெண் (சிறுமியின் அக்கா), இக்குண்டு வெடிப்பினால் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் உயிரிழந்தவரது பிரேதம் மாஞ்சோலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது...

இந்தப் பகுதியில் மீள்குடியேறியுள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சகோதரன் தனது காணியில் மண்டிக்கிடந்த புல்லை வெட்டிச் சுத்தம் செய்வதில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்குத் தண்ணீர் கொண்டு வருவதற்காகச் சென்ற அவரது சகோதரியாகிய ஜோசப் நிக்கலஸ் நிஷாந்தினி என்ற சிறுமியே இந்த வெடிப்புச் சம்பவத்தில் சிக்கியுள்ளார்.

படுகாயமடைந்து முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது அவர் மரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வெடிப்புச் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர், உயிரிழந்த சிறுமி மண்ணில் கொத்திய அடையாளத்துடன் கிடந்த கத்தி ஒன்றைக் கண்டெடுத்துள்ளதுடன், இந்தக் கத்தியினால் பொருள் ஒன்றை கொத்தியபோதே குறித்த குண்டு வெடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment