Sunday, 28 October 2012
இலங்கை::அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தச் சட்டம் இரத்துச் செய்யப்பட வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பொன்றை நடத்துமாறு சில அரசியல் கட்சிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களை தவிர நாட்டின் ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் மாகாண சபைகள் இயங்கியதால், அதன், நன்மை, தீமைகளை மக்கள் நன்கு புரிந்து கொண்டிருப்பார்கள் என்பதால், அது தொடர்பாக தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்களுக்கு வழங்க வேண்டும் என இந்த கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
அடுத்த மாத ஆரம்பித்தில், மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பொன்றை நடத்தி, 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் அவசியமா இல்லை என்பது குறித்து தீர்மானிக்குமாறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் பலவும் அரசாங்கத்திடம் கேட்டுள்ளன.
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கு காணி மற்றும் காவற்துறை அதிகாரங்களை வழங்கினால் அது நாட்டில் மீண்டும் அநாவசியமான நெருக்கடிகளை உருவாக்கக் கூடும் எனவும் இவர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.
அதேவேளை இந்த விடயம் தொடர்பாக அரசியல் கட்சிகள் இடையில் கடும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய அரசாங்கம் எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை என அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், குறித்த சட்டத்தை இரத்துச் செய்ய அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மக்களை தெளிவுப்படுத்து கருத்தரங்குகளை நடத்த அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தீர்மானித்துள்ளன. சிங்கள இனவாத அரசியல் கட்சிகளும், இனவாத அமைப்புகளுமே இந்த சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருவதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment