Sunday, 28 October 2012
இலங்கை:: அரசியலமைப்பிற்கு மதிப்பளிப்பது மிக மிக அவசியம்!
இனப்பிரச்சினைத் தீர்வினை இலகுவாக்கி மாகாண சபைகள் மூலமாக அதிகாரங்களைப் பகிர்த்து சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழ ஏற்பாடு செய்யுமென எதிர்பாரக் கப்பட்டு அமுலாக்கப்பட்டதே இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம். இன்றைய நாட்டின் அமைதியான சூழ்நிலையில் இச்சட்டம் இனியும் தேவையா அல்லது தேவையில்லையா எனும் விவாதம் அரசியல் வட்டாரத்தில் மிகப் பரவலாக எழுந்துள்ளது.
இந்நிலையில் அரச தரப்பு மற்றும் எதிரணியினர் தரப்பிலுள்ள முக்கியமான அரசியல்வாதிகள் தெரிவித்த கருத்துகளை வாரமஞ்சரி கேட்டறிந்து கொண்டது. அவர்கள் தெரிவித்த கருத்துகளை அப்படியே இங்கு தருகிறோம்.
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல
13ஆவது திருத்தச் சட்டம் என்பது அரசியலமைப்பின் ஒரு பகுதியே. அரசியலமைப்பின் ஒரு பகுதி என்ற வகையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற உறுப்பினர்கள் என்ற வகையில் நாமும் அதனை பாதுகாப்பதற்கு கடமைப் பட்டுள்ளோம்.
எனினும் நாட்டின் தேவைக்கேற்ப அரசியலமைப்பில் மாற்றம் காலத்துக்கு காலம் வேறுபடுகிறது. தற்போது 13ஆவது திருத்தச் சடடத்தை பற்றி கூறலாம். 13ஆவது திருத்தச் சட்ட அரசியலமைப்பின் ஒரு பகுதி. அத்துடன் பாராளுமன்றத்தை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு தங்களது கருத்துகளை வெளியிடுவதற்கு உரிமை இருக்கிறது. 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஒவ்வொருவரிடையே கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளதே தவிர, இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப் படவில்லை.
இது தொடர்பாக எவரும் பாராளுமன்றத்திலோ அல்லது அமைச் சரவையிலோ சமர்ப்பிக் கவில்லை. அரசியமைப்புக்கு மதிப்பளிக்கிறோம். அரசியலைப்புக்கு மதிப்பளிப்பதாகவே நாம் சத்தியப்பிரமாணமும் செய்துள்ளோம்.
அமைச்சர் விமல் வீரவன்ச
13ஆவது அரசியலைப்பு சீர்த்திருத்தத்தை ரத்து செய்வது தொடர்பாக மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றை நடத்துமாறு தேசிய சுதந்திர முன்னணி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 13ஆவது அரசியலைப்பு சீர்த்திருத்தத்தினை அடிப்படையாக வைத்து நாடு அரசியல் அழிவை நோக்கிச் செல்கிறது.
திவிநெகும திட்டம் முதன்முறை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது காணப்பட்ட எதிர்ப்புக்களுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்வைப் பார்க்கும் போது இதன் ஆபத்தான நிலை தெரிகிறது. எனவே உடனடியாக இதனை பொதுமக்கள் பார்வைக்குக் கொண்டு வந்து மக்கள் தீர்ப்பில் மூலம் முடிவு காண வேண்டும் என ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத் துள்ளோம்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
தமிழ் மக்களுக்கான சுபீட்சமான வாழ் வுக்கும், அவர்களுடைய அரசியல் உரிமை களைப் பாதுகாப்பதற்கும் 13ஆவது அரசியல் திருத்தமும் வாழ்வின் எழுச்சி யும் (திவிநெகும) உறுதுணையாக இருக்கும். இதனையே நாம் அன்றும் இன்றும் கூறி வருகிறோம். 13ஆவது அரசியல் திருத்தமும் அதற்கு அப்பாலான 13 திட்டமும் தான் எமது மக்களின் அரசியல் உரிமைகளை உறுதி செய்யும் அரசியல் சரத்துகள் என்றும் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தும் படி அரசிடம் கடந்த காலத்திலிருந்து வலியுறுத்தி வந்திருக்கிறோம். எமது இந்தக் கருத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உழுத்துப்போன திட்டங்கள் என்று கூறி அவற்றைக் கடுமையாக எதிர்த்து வந்தனர்.
ஆனால் இன்று வாழ்வின் எழுச்சி திட்டத்தை எதிர்த்து நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இவர்களின் இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் 13ஆவது அரசியல் திருத்தத்தினதும். திவிநெகும எனப்படும் வாழ்வின் எழுச்சித்திட்டத்தினதும் பயன்களை எமது மக்கள் அனுபவிக்க முடியாமல் போகும் சூழல் தோன்றியுள்ளது. பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவதற்கு ஒப்பான செயலைக் கூட்டமைப்பினர் செய்து வருகின்றனர் என்பதற்கு இது நல்ல எடுத்துக் காட்டாகும்.
லக்ஸ்மன் கிரியல்ல எம்.பி
13ஆம் திருத்தச் சட்டத்த ரத்து செய்யும் அரசாங்கத்தின் முயற்சியானது தற்கொலைக்கு நிகரானது. 13ஆம் திருத்தச் சட்டத் ரத்து செய்யப்பட்டால் அது நாட்டுக்கு பாரியளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தும். நாட்டின் பிரச்சினைகளுக்கு 13ம் திருத்தச் சட்டமே காரணம் என சிலர் குற்றம் சுமத்துகின்றனர். நாட்டின் அரசியல் சாசனத்துடன் விளையாடுவது எதிர்காலத்தை பாதிக்கும்.
பிரபா கணேசன் எம்.பி
13ஆவது திருத்த சட்டத்தை அகற்றி அதன் மூலம் மாகாணசபை முறைமையை ஒழிக்க முற்படுகின்றார்கள். இது நடைமுறைப்படுத் தப்படுமேயானால் தமிழ் பாடசாலைகளின் அபிவிருத்தி முற்றுமுழுதாக பாதிக்கப்படும். இன்று 13ஆவது திருத்த சட்டத்தை அகற்றி தமிழ் மக்களுக்கு கடைசியாக கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதமான மாகாணசபை முறைமையை ஒழிக்கப்பார்க்கிறார்கள். மாகாணசபை மூலமாக குறைந்த பட்சம் கிடைக்கப்பெற்றிருக்கும் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து கூட இதன் மூலம் இல்லாதொழிக்கப்படும். என்னைப் பொறுத்தவரையில் மாகாணசபை முறைமையில் கல்வி முதலிடம் பெறுகிறது. இப்படியான நிலையில் மாகாணமுறை அகற்றப்படுமாயின் கல்வி அமைச்சு மத்திய அரசாங்கத்திற்கு கீழ் சென்று விடும். இன்றைய நிலையில் ஒரு போதும் மத்திய தமிழ் கல்வி அமைச்சை நாம் பெற்றுக் கொள்ள முடியாது. ஆகவே 13ஆவது திருத்த சட்டம் அகற்றப்படுமாயின் எமது தமிழ் மக்களின் எதிர்காலம் கோள்விக்குறியா கிவிடும். அரசாங்கத்திலுள்ள இனவாத கட்சிக ளின் போக்குக்கு அரசாங்கம் ஒரு போதும் இடங்கொடுக்கக் கூடாது.
சிரேஷ்ட அமைச்சர் டி.யூ. குணசேகர
13ஆம் திருத்தச் சட்டம் காரணமாகவே வடக்கு, கிழக்கு இளைஞர்கள் ஆயுதங்களை கீழே வைத்தனர். ஆயுதங்களை ஏந்திய வடக்கு இளைஞர் யுவதிகள் ஆயுதங்களை களைத்து ஜனநாயக அரசியலில் இணைந்து கொண்டனர். 1ஆம் திருத்தத் சட்டத்தின் காரணமாகவே இது சாத்தியமானது. 13ஆம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரும் பலருக்கு இது நினைவில்லை. 13ம் திருத்தச் சட்டத் ரத்து செய்யப்படுவதன் மூலம் மீண்டும் பிரிவினைவாதம் தலைதூக்கக் கூடும்.
13ஆம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கையினால் தமிழ் புலம்பெயர் மக்களும், புலி ஆதரவாளர்களுமே அதிகளவில் சந்தோஷப்படுவார்கள். பிரபாகரனின் போரை நியாப்படுத்தும் வகையில் எவரும் செயற்படக் கூடாது. இந்த நிலைமைகளை புரிந்து கொள்ளாமல் ஒரு சிலர் செயற்படுகின்றமை வருந்தத்தக்கது.
அமைச்சர் திஸ்ஸ விதாரண
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்த முயற்சிக்கும் சர்வதேச சக்திகளே 13ம் திருத்தச் சட்டத்தினை ரத்து செய்யுமாறு கூறிவருகின்றனர். நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அகில கால மீளாய்சு அமர்வுகள் நடைபெறவுள்ளன. எனவே குறித்த அமர்வுகளில் இலங்கைக்கு நெருக்கடி நிலைமையை ஏற்படுத்தும் முயற்சியில் சர்வதேச சக்திகள் 13ஆவது திருத்தச் சட்ட ரத்துச் செய்யுமாறு கூறுகின்றனர். இதற்கு ஆளும் கட்சியின் கில தரப்பினரும் துணை போவதாக அமைச்சர் திஸ்ங விதாரண குறிப்பிட்டுள்ளார்.
அருந்திக பெர்ணான்டோ எம்.பி
13ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டு அரசாங்கத்தில் இணைந்திருப்பவர்கள், அரசாங்கத்தில் இணைந்திருக்க விரும்பவில்லை என்றால், வெளியேறலாம். அரசாங்கத்தில் இருக்கும் சிலர், எதிர்க்கட்சியினருக்கு போராட்ட கோஷங்களை தேடி கொடுப்பதாகவும் 13ஆவது அரசியல் அமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அது குறித்து கருத்துக்களை வெளியிடுவோர் இப்படியான கோஷங்களை பெற்று கொடுப்பவர்கள். இந்தியாவுக்கும் அழுத்தங்களை ஏற்படுத்தும் இந்த பிரச்சினை குறித்து பேசி தீர்வை வழங்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு, அத்துடன் பிரச்சினைகளும் இல்லை.
மு.கா பொதுச் செயாளர் ஹசன் அலி எம்.பி
அரசாங்கம் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் வெகுசன வாக்கெடுப்பு நடத்துக் கூடாது. 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் வெகுசன வாக்கெடுப்பு நடத்தினால் அதனை முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாக எதிர்க்கும். 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் வெகுசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அது வடக்கு கிழக்கு மாகாணங்களில் மட்டுமே நடத்தப்படவேண்டும். நாடுமுழுவதிலும் வெகுசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் பெரும்பான்மை சிங்கள மக்கள் அதனை எதிர்க்கக் கூடும். எனவே நாடு முழுவதிலும் வெகுசன வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடாது.
தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி
13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க எடுக்கப்படும் முயற்சி தமக்குத்தாமே குழிதோண்டும் செயற்பாடாகும். அவர்கள் நன்றாக குழியைத் தோண்டட்டும். 13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பினை நடத்த வேண்டும் என்று அமைச்சர் விமல்வீரவன்ச ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து கேட்டபோதே சம்பந்தன் எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் அதிகம் பேச நான் விரும்பவில்லை. 13ஆவது திருத்தத்தை ஒழிப்பதன் மூலம் தமக்கு தாமே அவர்கள் குழி தோண்டுகின்றனர் தோண்டட்டும்.
சிவநேசதுரை சந்திரகாந்தன்
13ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் இரத்துச் செய்யப்படுதென்பது, நாட்டில் மீண்டும் மோதல் ஏற்பட மூல ஆரம்பமாக அமையும். 13ஆவது அரசியல் அமைப்புத் திருத்தம் இரத்துச் செய்யப்படுவதை தாம் கடுமையாக எதிர்ப்பாதாகவும் இந்த அரசியல் அமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்தி, மாகாண சபைகளுக்கு அதிகளவிலான அதிகாரங்களை வழங்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் உட்பட நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்கள் 13ஆவது அரசியல் அமைப்புத்திருத்தம் தொடர்பாக கடும் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதன்மூலம் அந்த மக்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து செல்வது முக்கியமானது. இந்த அரசியல் அமைப்புத் திருத்தத்தை இரத்துச் செய்ய வேண்டும் என கூறுபவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒரு சிலரே அன்றி அரசாங்கம் அல்ல எனவும் சந்திரகாந்தன் கூறியுள்ளார்.
(எஸ்.சுரேஷ்)

No comments:
Post a Comment