Wednesday,September,05,2012புதுடில்லி::தமிழகம் உட்பட, இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள, இலங்கை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், மத்திய அரசு மேற்கொள்ளும். இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசுடன், மத்திய அரசு, தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது' என, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு, சுற்றுலா மற்றும் புனித யாத்திரை மேற்கொள்ளும் இலங்கை மக்களுக்கு எதிராக, தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் நடப்பதால், அடுத்த அறிவிப்பு வரும் வரை, இலங்கைவாசிகள் யாரும், தமிழகத்துக்கு செல்லக் கூடாது' என, அந்நாட்டு அரசு சார்பில், நேற்று முன்தினம் இரவு, எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்தச் சூழலில், இந்தப் பிரச்னை குறித்து, வெளியுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, தங்கள் வருகையை முன்கூட்டியே, இலங்கை பயணிகள் தெரியப்படுத்தாமல், சுற்றுலா வந்துள்ளனர். இவர்களுக்கு எதிராக, சில சம்பவங்கள் நடந்துள்ளதாக, எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. வரலாறு மற்றும் கலாசார ரீதியாக, இந்திய மக்களுக்கும், இலங்கை மக்களுக்கும், நெருங்கிய தொடர்பு உள்ளது.இரு நாட்டு மக்களும், ஒருவருக்கு ஒருவர், சந்திப்புகளை ஏற்படுத்திக் கொள்வது, மிகவும் அவசியமானது.
இதன் அடிப்படையில், இலங்கையில் உள்ள இந்திய தூதரகம், கடந்தாண்டு மட்டும், இலங்கையைச் சேர்ந்த இரண்டு லட்சம் பேருக்கு, இந்தியா சுற்றுலா செல்ல, விசா அளித்தது.இதேபோல், கடந்தாண்டு, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு, 1.75 லட்சம் பேர், சுற்றுலா சென்றனர். இந்த பிரச்னையில், அனைத்து விஷயங்களையும் கவனத்தில் கொண்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.
No comments:
Post a Comment