Wednesday, September 5, 2012

இந்தியா - சீனா இடையே மீண்டும் கூட்டு ராணுவ பயிற்சி!

Wednesday,September,05,2012
புதுடில்லி::ராணுவ உறவுகளை பலப்படுத்தவும், நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தவும், இந்தியா - சீனா இடையே, மீண்டும் கூட்டு ராணுவ பயிற்சியை துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சீன ராணுவ அமைச்சர், ஜெனரல், லியாங் குவாங்லி, நல்லுறவுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். எட்டு ஆண்டுகளுக்கு பின், இந்தியா வரும், முதல் சீன ராணுவ அமைச்சரான குவாங்லி, டில்லியில் ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணியை சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின் போது, இருநாடுகள் இடையே நல்லுறவை பலப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, இந்தியா - சீனா ராணுவ வீரர்கள், கூட்டாக ராணுவ பயிற்சி மேற்கொள்வது, ராணுவ உயர் அதிகாரிகள் பரிமாற்றம், ஆயுதம் தாங்கிய வீரர்களுக்கு பயிற்சி தருவது, கடல் பகுதியில், கூட்டாகப் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவது போன்ற விஷயங்களில் உடன்பாடு ஏற்பட்டது.ராணுவ அமைச்சர் அந்தோணி, சீனாவுக்கு வருகை தரவேண்டும் என்றும், சீன அமைச்சர் குவாங்லி அழைப்பு விடுத்தார். அதை ஏற்று, அடுத்த ஆண்டு, சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், இருதரப்பு பேச்சுவார்த்தைகள் சுமுகமாக இருந்ததாகவும், பின்னர் நிருபர்களிடம் பேசிய, அந்தோணி தெரிவித்தார்.

இந்தியா - சீனா ராணுவ வீரர்கள், சீனாவில், குன்மிங் பகுதியில், 2007ல், கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டனர். பின், 2008ல், கர்நாடகாவின் பெல்காம் பகுதியில், மீண்டும் கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்றது; மூன்றாவது முறையாக, 2010ல், சீனாவில் நடைபெற்றது. அதன் பின், பல்வேறு காரணங்களால், இருநாட்டு வீரர்கள் கூட்டு பயிற்சி மேற்கொள்வது நிறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment