Wednesday, September 5, 2012

இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கும் விவகாரம்:பார்லிமென்டில் அ.தி.மு.க., - தி.மு.க., - எம்.பி.,க்கள் பெரும் ரகளை!

Wednesday,September,05,2012
புதுடெல்லி::பா.ஜ., - தி.மு.க., - அ.தி.மு.க., - எம்.பி.,க்களின் ரகளையால், 10வது நாளாக, நேற்றும், பார்லிமென்ட் நடவடிக்கைகள் சீர்குலைந்தன. ஆனாலும், அமளிக்கு மத்தியில், ஒரே ஒரு மசோதா மட்டும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, "விவாதம் இல்லாமல், எந்த மசோதாவையும் நிறைவேற்ற விடக்கூடாது' என, எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வதில், பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக கிளம்பிய ஊழல் குற்றச்சாட்டால், மத்திய அரசுக்கு, எதிர்க்கட்சிகள் பெரும் நெருக்கடி தந்து வருகின்றன. பார்லிமென்டின் இரு சபைகளிலும், தினமும், இப்பிரச்னையை கிளப்பி வருவதால், ஒன்பது நாட்களாக, எந்த அலுவலும் நடக்கவில்லை.இந்நிலையில், 10வது நாளாக, நேற்றும், லோக்சபா, ராஜ்யசபா என, இரண்டுமே அடுத்தடுத்து ஒத்திவைப்புகளை சந்தித்தன.

காலையில், லோக்சபா துவங்கியதும், கேள்வி நேரம் பாதிப்புக்குள்ளானது. நிலக்கரி ஊழல் பிரச்னைக்காக, பா.ஜ., - எம்.பி.,க்கள் ஒருபுறம் கூச்சல் போட்டுக் கொண்டிருக்க, மற்றொரு பக்கம், தமிழக எம்.பி.,க்கள் ரகளையில் இறங்கினர்.தி.மு.க., - எம்.பி.,க்கள், வழக்கத்துக்கு மாறாக, சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். தமிழகத்தில், இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்து, கோஷங்கள் எழுப்பினர். "பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும்' என்ற, கோஷங்கள் அடங்கிய போஸ்டர்களையும், கையில் பிடித்திருந்தனர்.

அப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி., திருமாவளவனும், ஒரு போஸ்டரை பிடித்தபடி, கோஷம் போட்டார். சபாநாயகர் இருக்கையை, அவர் முற்றுகையிட்டாலும்,
எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜை நோக்கியே, கோஷத்தை எழுப்பினார். இலங்கை சென்றிருந்த போது, தன் தொகுதியான சாஞ்சிக்கு வரும்படி, ராஜபக்ஷேவுக்கு சுஷ்மா அழைப்பு விடுத்திருந்தார் என்பதால், "கொலைக் குற்றவாளியை வரவேற்கக் கூடாது' என, எழுதப்பட்ட போஸ்டரை, சுஷ்மாவிடம் காட்டியபடி, திருமாவளவன் கோஷம் போட்டார்.
ஆனாலும், சுஷ்மா அதை கண்டு கொள்ளவில்லை. அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், வழக்கம் போல, நேற்றும், கடும் கோஷங்கள் எழுப்பினர்.

"தமிழகத்தில் பயிற்சி பெறும் இலங்கை ராணுவத்தினரை, உடனே திருப்பி அனுப்ப வேண்டும்' என்றே கோஷமிட்டனர்.எம்.பி.,க்களின் இந்த ரகளை மற்றும் அமளி காரணமாக, சபை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும், 12 மணிக்கு கூடியது. அப்போது, தி.மு.க., - எம்.பி..,க்கள் அமைதி காத்தனர்; ஆனால், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், கோஷங்கள் எழுப்பி, ரகளையை ஆரம்பித்தனர். இவ்வளவு பெரும் அமளிக்கு மத்தியிலும், நேற்று, ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது.பின், சபை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது; ராஜ்யசபாவும், இதேபோல் அடுத்தடுத்து, ஒத்திவைப்புகளைச் சந்தித்தது.இதற்கிடையில், நேற்று, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி, ஆலோசனையில் ஈடுபட்டன. நிலக்கரி ஊழலுக்காக, பெரும் அமளியை, பார்லிமென்ட் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், அரசு தரப்பினர், தந்திரமாக, ஓரிரு மசோதாக்களை நிறைவேற்றிக் கொண்டிருப்பது குறித்து, ஆலோசித்தன. இதைத் தடுக்க வேண்டும் என்றும் தீர்மானித்தன.

மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் வைத்த "செக்':"பார்லிமென்டில், எந்த மசோதாவையும் விவாதம் இல்லாமல், நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது' என, எதிர்க்கட்சிகள், முடிவு செய்திருப்பதால், அரசு பணிகளில் உள்ள, எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பினருக்கு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா, இந்தக் கூட்டத் தொடரில் நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளதால், விரைவில், இதுதொடர்பான மசோதாவை, பார்லிமென்டில், கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக உள்ளது.நிலக்கரி ஊழல் காரணமாக, பெரும் நெருக்கடியையும், அதிருப்தியையும், மத்திய அரசு சம்பாதித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை திசை திருப்ப, பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை கொண்டு வர காங்கிரஸ் விரும்புகிறது.

இதன்மூலம், ஊழல் புகாரிலிருந்து தப்பி, மக்களிடம் நல்ல பெயர் எடுத்து விடலாம் என, நம்புகிறது.ஒருவேளை, பா.ஜ., - எம்.பி.,க்கள் ரகளையால், மசோதா நிறைவேறாமல் போனால், எதிர்க்கட்சிகள் மீதுதான் பழி விழும். "மசோதா நிறைவேறுவதை அவர்கள்தான் தடுத்து விட்டனர்' என, காங்கிரசும், எதிர்க்கட்சிகள் மீது பழியை போட்டு விடலாம்.இதை உணர்ந்ததால்தான் என்னவோ, "இனிமேல், எந்த மசோதாவையும், அமளிக்கு மத்தியில் நிறைவேற்ற விடக் கூடாது' என, எதிர்க்கட்சிகள் முடிவெடுத்து உள்ளன.

No comments:

Post a Comment