Monday, September 24, 2012

காவிரி நதி நீர் பிரச்னை : சுப்ரீம் கோர்ட்டில் மனு ஜெயலலிதா உத்தரவு!

Monday, September 24, 2012
சென்னை::காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கினை கர்நாடகா திறந்துவிட உத்தரவிடவேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த 19ம் தேதி பிரதமர் தலைமையில் டெல்லியில்  நடந்த காவிரி நதிநீர் ஆணையக் கூட்டத்தில், தமிழக முதல்வர்  ஜெயலலிதா  தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடி நிலைமையை விரிவாக எடுத்துக் கூறினார். ஒரு நாளைக்கு 2 டி.எம்.சி. அடி தண்ணீர் வீதம் 24 நாட்களுக்கு காவிரி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் வினாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் வீதம், செப்டம்பர் 20ம் தேதி முதல்  அக்டோபர் 15ம் தேதி  வரை கர்நாடகா தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பு தமிழகத்திற்கு ஏற்புடையதாக இல்லை என்றாலும், இதனையும் திறந்துவிட கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்தது. இந்த சூழ்நிலையில், காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கினை கர்நாடகா திறந்துவிட உத்தரவு பிறப்பிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது தொடர்பாக முதல்வர்  ஜெயலலிதா  தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில்  அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், பொதுப்பணித் துறை செயலாளர், காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தின் முடிவில், காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கினை கர்நாடகா திறந்துவிட உத்தரவு பிறப்பிக்கக் கோரும் மனுவினை உடனே உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முதல்வர் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment