Tuesday, September 4, 2012

தமிழகத்துக்கு செல்ல தடை இலங்கை அரசு அறிவிப்பால் இரு நாட்டு உறவில் சிக்கல்!

Tuesday,September,04,2012
இலங்கை::கொழும்பு::பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அடுத்த உத்தரவு வரும் வரை இலங்கை மக்கள் யாரும் தமிழகத்துக்கு செல்ல வேண்டாம் என்று இலங்கை அரசு எச்சரித்துள்ளதால் இந்திய இலங்கை உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் சர்வதேச விதிமுறைகளை மீறியும் மனித உரிமைகளை மீறியும் ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்ததாக புகார் எழுந்துள்ளது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் பலர் பலியாகி உள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், இலங்கை அதிகாரிகளுக்கு தமிழகத்தில் ராணுவ பயிற்சி அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனால் தமிழக மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இலங்கை அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். பரபரப்பான சூழ்நிலையில், சென்னையில் சுங்க இலாகா புட்பால் அணியினருடன் இலங்கை அணியினர் விளையாட நேரு ஸ்டேடியத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து நேரு ஸ்டேடிய தற்காலிக அதிகாரி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதேபோல் வேலம்மாள் பள்ளி மாணவர்களுடன் விளையாட, இலங்கை ரத்தினபுராவை சேர்ந்த ஹில்பர்ன் இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் 8 பேரும் பயிற்சியாளரும் வந்தனர். அவர்களும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளதால், அங்கு யாரும் செல்ல வேண்டாம் என்று இலங்கை அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கை மக்கள் சுற்றுலா, கலாசாரம், விளையாட்டு மற்றும் அதிகாரிகள் ராணுவ பயிற்சி பெறவும் தமிழகத்துக்கு செல்கின்றனர். அவர்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. இது வருத்தம் அளிக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி மாதா சர்ச்சுக்கு நேற்று யாத்திரை சென்ற 184 பேரை, அங்குள்ள சிலர் முற்றுகையிட்டும் அவர்களை சர்ச்சுக்குள் அடைத்தும் உள்ளனர். இலங்கை மக்களின் பாதுகாப்புக்கு தமிழகத்தில் அச்சுறுத்தல் உள்ளதால், அங்கு யாரும் செல்ல வேண்டாம். இதுகுறித்து அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை இலங்கை மக்கள் யாரும் தமிழக பயணம் மேற்கொள்ள வேண்டாம். அவசரமாக தமிழகத்துக்கு செல்ல வேண்டியது இருந்தால், பயண திட்டம் குறித்து சென்னையில் உள்ள இலங்கை ஹை கமிஷனுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கு மத்திய அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. கோடிக்கணக்கில் நிதியுதவியும் அளித்து வருகிறது. ஆனால், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வந்த இலங்கை அரசு, இப்போது தமிழகத்துக்கு எதிராக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் இந்திய இலங்கை உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று தமிழக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment