Tuesday, September 4, 2012

தமிழகத்தில் தங்கியிருக்கும் இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை!

Tuesday,September,04,2012
இலங்கை::தமிழகத்தின் தஞ்சாவூர் நகருக்கு அருகேயுள்ள தேவாலயமொன்றை அண்மித்த கட்டடத்தில் தங்கியிருக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஒழுங்குகளை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்துள்ளது.

இதற்கமைய விசேட விமானமொன்றை இன்று அங்கு அனுப்பி வைக்கவுள்ளதாக பதில் வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அன்னை வேளாங்கன்னி தேவாலயத்திற்கு யாத்திரை மேற்கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த குழுவொன்றுக்கு தமிழகத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பதில் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த குழுவினர் தஞ்சாவூர் சென்றிருந்தபோது அங்கு கத்திகள் மற்றும் தடிகளுடன் விரைந்த குழுவொன்று உடனடியாக தமிழகத்தை விட்டு வெளியேறுமாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததுடன் உடனடியாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஊடாக மத்திய அரசுக்கு தகவல் வழங்கப்பட்டதாக பதில் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கமைய, இந்திய மத்திய அரசு குறித்த இலங்கையர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்கியுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கையர்கள் தம்மை உடனடியாக நாட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய இன்று விசேட விமானமொன்றை தமிழகத்திற்கு அனுப்பி அவர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாகவும் பதில் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

எவ்வாறாயினும், குறித்த குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மறு அறிவித்தல் வரை தமிழகத்திற்கான பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு பதில் வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அத்தியாவசிய தேவைகளுக்காக தமிழகத்திற்கு செல்வோர் தூதரகத்திற்கு தகவல் வழங்கியதன் பின்னர் அங்கு செல்லவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்வதில் எவ்வித பிரச்சினையும் கிடையாது என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழகம் தொடர்பில் மாத்திரமே பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக பதில் வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment