Monday, September 3, 2012

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ஒட்டு கேட்பு விவரங்களை வெளியிட முடியாது!

Monday, September 03, 2012
புதுடெல்லி::உள்துறை அமைச்சகத்தின் அனுமதியுடன் மேற்கொள்ளப்படும் தொலைபேசி ஒட்டு கேட்பு விவரங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது என தகவல் ஆணையர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான துறைகளில் மேற்கொள்ளப்படும் எந்த காரியங்களையும் பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக தகவல் அறியும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் ராணுவம், சிபிஐ போன்ற ஒரு சில துறைகளை தவிர மற்ற துறைகளில் இருந்து எந்தவொரு விவரங்களையும் கேட்டறியலாம்.

டெல்லியை சேர்ந்த தலிஷ்ரே என்பவர் தொலைபேசி ஒட்டு கேட்பு விவரங்களை கேட்டு உளவுத்துறைக்கு விண்ணப்பித்தார். உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்படுவதால், தலிஷ் ரேயின் கோரிக்கையை உள்துறை அமைச்சகத்துக்கு உளவுத்துறை அனுப்பி வைத்தது. நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் ஒட்டு கேட்பு விவரங்களை வெளியிட முடியாது என உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இதை எதிர்த்து தகவல் ஆணையரிடம் தலிஷ்ரே புகார் செய்தார். அதை விசாரித்த தகவல் ஆணையர் சுஷ்மா சிங், ஒட்டு கேட்பு விவரங்களை வெளியிட உள்துறை அமைச்சகம் மறுத்தது சரியே என தெரிவித்தார். ‘‘உளவு அமைப்புகள் நாட்டின் பாதுகாப்பு கருதி தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் தொலைபேசி ஒட்டு கேட்பு பணியை செய்து வருகின்றன. இதை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது’’ என சிங் தெரிவித்தார்.

No comments:

Post a Comment