Sunday, September 30, 2012

பிள்ளையான் கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு பெரும் துரோகம் இழைத்துள்ளார்-பாராளுமன்ற உறுப்பினரர் ஹரீஸ்!

Sunday, September 30, 2012
இலங்கை::கிழக்கு மாகாண முதலமைச்சராக தமிழர் ஒருவர் இடம்பெறாமைக்கு முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் தான் காரணமாவார். ஏனெனில் கிழக்கு மாகாணத்தில் தன்னை விடுத்து வேறொரு தமிழர் அமைச்சராவதை அவர் விரும்பவில்லை. இதன் மூலம் பிள்ளையான் கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு பெரும் துரோகம் இழைத்துள்ளார் என்று திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரர் ஹரீஸ் தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை கல்முனைகுடி பர்ஜீஸ் மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினரர் ஹரீஸ் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:-

சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேரம் பேசும் சக்தியினால் தான் கிழக்கில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இல்லையென்றால் கிழக்கில் மீண்டும் தமிழர் ஒருவரே முதலமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டிருப்பார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக நியமிக்க வேண்டுமென இந்தியா, அமெரிக்கா, நோர்வே உட்பட சர்வதேச நாடுகள் அரசுக்கு பாரியளவில் அழுத்தம் கொடுத்து வந்த போதிலும் முஸ்லிம் காங்கிரசின் பலத்தினால அவற்றையெல்லாம் முறியடித்து முஸ்லிம் முதலமைச்சர் என்ற கனவை நனவாக்கியுள்ளோம்.

எமது முஸ்லிம் காங்கிரசைப் பொறுத்தளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் போன்று செயற்பட முடியாது. அவர்களுடைய இலக்கு வேறு, நமது அரசியல் பாதை வேறு.

கிழக்கு மாகாண சபை ஆட்சி அமைப்புக்கு மு.கா. அரசுக்கு ஆதரவு வழங்குவதென மேற்கொண்ட தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விமர்சித்து வருகிறது. ஆனால் அதில் எந்த நியாயமும் இல்லை.

கிழக்கு மாகாணத்தில் த.தே.கூட்டமைப்புடன் இணைந்து மு.கா. ஆட்சியமைத்திருந்தால் முஸ்லிம்கள் நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டதாக சிங்களப் பேரினவாதிகள் கிளர்ந்தெழுவார்கள். அது நமது ஒட்டு மொத்த சமூகத்திற்கும் பெரும் பாதிப்பாக அமையும்.

கிழக்கு மாகாண தேர்தலை மாத்திரம் முன்வைத்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்கள் குறித்துப் பேசி வந்தது. அதற்கு முன்னர் அவர்கள் முஸ்லிம் சமூகத்தைப் பற்றி கணக்கில் எடுத்து பேசவில்லை.

அது ஒரு புறம் இருக்க தமிழ் இளைஞர்களுடைய தியாகம்தான் இலங்கையில் மாகாண சபை முறைமை ஏற்படுவதற்கு காரணமாகும். ஆனாலும் மாகாண முறைமையினை பெறுவதற்குக் காரணமாக இருந்த தமிழ் சமூகத்துக்கு கிழக்கு மாகாண சபையில் ஓர் அமைச்சு கூட ஒதுக்கப்படவில்லை என்பது எமக்கு கவலையளிக்கிறது. தமிழர் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்று அரசை மு.கா. வலியுறுத்திய போதிலும் அது வெற்றியளிக்கவில்லை.

கிழக்கு மாகாண அமைச்சரவையில் தமிழர் ஒருவர் இடம்பெறாமைக்கு முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் தான் காரணமாவார். ஏனெனில் கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் அமைச்சராவதை அவர் விரும்பவில்லை. இதன் மூலம் பிள்ளையான் தமிழ் மக்களுக்கு பெரும் துரோகமிழைத்துள்ளார்.

அதேவேளை கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களில் யார் யாருக்கு அமைச்சுப் பதவிகளைக் கொடுப்பது என்று தலைவர்தான் தீர்மானித்தார். அதற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

ஆனால் மு.கா. மாகாண சபை உறுப்பினரொருவர் தனக்கு அமைச்சுப் பதவி கிடைக்காமைக்கு ஹரீஸ் எம்.பி.யும், கல்முனை மேயருமே காரணம் என்று குற்றம் சுமத்தியுள்ளார். இது அபாண்டமான குற்றச்சாட்டாகும். என்றாலும் இது குறித்து நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை” என்றும் ஹரீஸ் எம்.பி.குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment