Thursday, September 27, 2012
சென்னை:: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியனின் 80 வது பிறந்த நாளையொட்டி நேற்று அவரது இல்லத்திற்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று பொன்னாடை அணிவித்து மலர் கொத்து கொடுத்து வாழ்த்தினார். தா.பாண்டியனுக்கு நேற்று முன்தினம் 80 வது பிறந்த நாளாகும். அன்று முதல்வர் ஜெயலலிதா செல்ல முடியாததால், தனது சார்பில் அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை அனுப்பி வைத்து தனது வாழ்த்து செய்தியை அனுப்பி வைத்தார்.
நேற்று தா.பாண்டியனை நேரில் சென்று வாழ்த்துவதற்காக தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் நேராக அண்ணாநகர் முகப்பேரில் உள்ள தா.பாண்டியன் இல்லத்திற்கு முதல்வர் ஜெயலலிதா சென்றார். முதல்வர் ஜெயலலிதாவை வீட்டு வாசலில் தா.பாண்டியன் வரவேற்றார். நேற்று (முன்தினம்) என்னால் வரமுடியவில்லை. எனவே தான் இன்று (நேற்று) நேரில் வந்து வாழ்த்த வந்தேன். என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் என்று முதல்வர் ஜெயலலிதா தா.பாண்டியனிடம் கூறினார். முதல்வர் ஜெயலலிதாவை வீட்டினுள் தா.பாண்டியன் அழைத்துச் சென்றார். அவரது குடும்பத்தினரை முதல்வர் ஜெயலலிதாவுக்கு அறிமுகம் செய்தார். ``
80 வயது என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மைல் கல் ஆகும். உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்,, என்று கூறி தா.பாண்டியனுக்கு முதல்வர் ஜெயலலிதா பொன்னாடை போர்த்தி பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். வீட்டுக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தா.பாண்டியன் பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்தார். அவருக்கு 2013-ம் ஆண்டுக்கான கையால் செய்யப்பட்ட அழகிய வண்ண காலண்டர் ஒன்றையும் பரிசாக அளித்தார். பின்னர் தா.பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் முதல்வர் ஜெயலலிதா புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் முதல்வர் ஜெயலலிதா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அவரை வாசல் வரை வந்து தா.பாண்டியனும், அவரது குடும்பத்தினரும் வழி அனுப்பி வைத்தனர்.

No comments:
Post a Comment