Thursday, September 27, 2012
இலங்கை::வடக்கின் பல பிரதேசங்களின் கிராமிய பாதைகளைப் புனரமைப்பதற்கென பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பெருமளவு நிதியை வழங்கியுள்ள போதும் அந்தப் பணம் செலவு செய்யப்படவில்லையென அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட் டங்களுக்கான விசேட அபிவிருத்திக் கூட்டத்தில் இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அண்மையில் 77 கிலோ மீற்றர் கிராமிய பாதை களைப் புனரமைக்க பணம் வழங்கப்பட்டது என தெரிவித்த அமைச்சர் பணத்தைப் பெற்றுக்கொள்பவர்கள் பாதைகளைப் புனரமைப்பதில் மந்தப் போக்கையே கடைப்பிடிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற இந்த அபிவிருத்திக் கூட்டத்தின் போது கிராமிய பாதைகள் புனரமைப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
பிரதேச சபைகளுக்கு இதற்கான பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்ட போதும் அதன் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கம் இதற்கு வேறு வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிறந்தது எனவும் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டார்.
இது பற்றித் தெளிவுபடுத்துகையிலேயே அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். இது பற்றி சம்பந்தப்பட்ட பிரதேச சபைத் தலைவர்களிடம் ஜனாதிபதி கேட்ட போது; தொழில் நுட்ப உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையும் இதற்கானதொரு காரணமாக உள்ளதென அவர்கள் தெரிவித்தனர். இப்பிரச்சினையை கிளிநொச்சி மாவட்டச் செயலாளரின் கவனத்துக்குக் கொண்டுவந்த ஜனாதிபதி, ஒப்பந்த அடிப்படையிலாவது தொழில் நுட்ப உத்தியோகத்தர்களை நியமித்து இந்த செயற்திட்டங்களை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அத்துடன் இச்செயற்பாடுகளில் உதவுமாறு முருகேசு சந்திரகுமார் எம். பி. யையும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

No comments:
Post a Comment