Monday, September 24, 2012

மன்னார் நீதிமன்றம் மீது தாக்குதல்:43 பேர் தொடர்ந்தும் விளக்கமறியளில்!

Monday, September 24, 2012
இலங்கை::மன்னார் நீதிமன்றம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை மற்றும் மன்னார் நீதவானுக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்தமை குறித்த வழக்கு விசாரணைகள் இன்று மன்னார் நீதிமன்றில் இடம்பெற்றது.

இந்த வழக்கு விசாரணை மேலதிக நீதவான் ஆர். திசாநாயக்க முன்னிலையில் இடம்பெற்றது.

நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த 43 பேர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப்பட்டனர்.

இதன் போது, குறித்த வழக்கு விசாரணை தொடர்பான வாத பிரதி வாதங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், சந்தேகத்திற்குரிய 43 பேரையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, மன்னார் நீதவானுக்கு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பான விசாரணையும், இன்றைய தினம் இடம்பெற்றது.

எனினும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்றைய தினம் நீதிமன்றத்தில் சமூகம் அளித்திருக்கவில்லை.

நாடாளுமன்ற விசேட சிறப்புரிமைக்கு அமையவே அவர் இன்று சமூகம் அளிகவில்லை என, அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

இதற்கு அமைய குறித்த வழக்கு தொடர்பான விசாரணை எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இதனிடையே, குறித்த வழக்கு விசாரணைகளை அவதானிக்கும் பொருட்டு இலங்கை வருகை தந்துள்ள, சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதி மாக் டிரவல் இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

இதன் போது, அவர் வழக்கு விசாரணைகளை அவதானித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment