Monday, August 27, 2012

சென்னையில் இன்று அதிமுக செயற்குழு கூட்டம்!

Monday, August 27, 2012
சென்னை::அதிமுக செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று (ஆக.27) நடைபெறுகிறது.

சென்னை ராயபேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க தலைமை கழகத்தில் இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்திற்கு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார். அதிமுக பொதுச் செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

செயற்குழு கூட்டத்தில், பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஓர் ஆண்டில் அ.தி.மு.க அரசு மக்களுக்காக செய்த சாதனைகளை விளக்கும் வகையில் பொது கூட்டங்கள் நடத்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் முல்லை பெரியார் அணை பிரச்சினை, காவிரி பிரச்சினையில் மத்திய அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை வலியுறுத்தும் தீர்மானங்களும் செயற்குழு கூட்டத்தில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படும் சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தை தடுத்து நிறுத்தும் வகையிலும், மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானமும் இடம் பெறுகிறது.

இது மட்டும் அல்லாமல் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற டெசோ மாநாடு குறித்தும், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் செயற்குழு கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 250 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழுடன் தவறாமல் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்துள்ளார். இதனை ஏற்று அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.

செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. தலைமை கழகத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா வருவதையொட்டி அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க அ.தி.மு.க தலைமைக்கழக நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

No comments:

Post a Comment