Sunday, August 26, 2012இலங்கை::கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பலமாகச் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழ்பேசும் தமிழ், முஸ்லிம் தலைமைகளினால் அங்கிருந்து எழுப்பப்பட்டுவரும் இன, மத, பிரதேச ரீதியான கருத்துக்களால் அவ்விரு சமூகங்களையும் சார்ந்த மக்கள் துவண்டு போயுள்ளனர். அரசியலுக்காக இப்படியுமா தமக்குள் மோதி சமூகத்தை விற்றுப் பிழைப்பு நடத்த வேண்டும் எனும் கேள்வி பெரும்பாலான கிழக்கு மாகாண மக்களின் மனங்களில் எழுந்து வருகின்றது. இது ஆரோக்கியமானதல்ல. இது ஒரு சமூகத்தை அச்சமூகத்திற்குள்ளும், ஏனைய சமூகங்களுடனும் ஆணித்தரமான குரோதத்தை ஏற்படுத்த வழிசமைத்துவிடும் என்பதே இன்றுள்ள அச்சமாகும்.
ஆனால் இது குறித்து அரசியல் தலைமைகள் துளியளவும் அலட்டிக் கொள்வதாக இல்லை. ஆட்சியைப் பிடிப்பதும், தாம் சார்ந்த சமூகப் பிரதிநிதி ஒருவர் முதலமைச்சராக வேண்டும் என்பதுவுமே அவர்களது கனவாகவும், எண்ணமாகவும் உள்ளது. அதற்காக அவர்கள் எதனையும் செய்வதற்குத் தயாராகவே உள்ளனர் போலவே நடந்துகொள்கின்றனர். தேர்தலுக்கான திகதி நெருங்க நெருங்க இவர்களது அட்டகாசங்களும் அதிகரித்தவண்ண முள்ளன. இப்போது இதனைத் தடுத்து நிறுத்துவது யார்? என்பதுவும் எப்படித் தடுத்து நிறுத்துவது என்பதுவுமே மக்கள் முன்பாகவுள்ள விடைகாணப்பட வேண்டிய இரு கேள்விகளாக உள்ளன.
இனங்களுக்கிடையே விரோதத்தைத் தூண்டும் வகையில் இனரீதியாக எவரும் பேச வேண்டாம் என்றும் அவ்வாறு பேச முற்பட்டால் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் அரசாங்கம் பகிரங்கமாகவே அறிவித்திருந்தது. ஆனால் அது கிழக்கு தேர்தல் களத்தில் நிற்கும் கட்சித் தலைவர்களுக்கும், வேட்பாளர்களுக்கும் செவிடன் காதில் ஊதப்படும் சங்கின் ஒலியாகவே உள்ளது. அதுவும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அதிமுக்கிய பிரமுகர்கள் சிலரே துணிந்து அரசின் அறிவிப்பையும் மீறி இனத்துவேசமாகப் பேசிவருவது பலரையும் வியப்பிலும், ஆச்சரியத்திலும், கவலையிலும் ஆழ்த்தி வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பற்றி நாம் கூறத் தேவையில்லை. அவர்கள் ஆரம்பம் முதலே தமிழ்த் தேசியம் பற்றிய இன ரீதியான கொள்கையிலிருப்பவர்கள். முன்னர் புலிகள் போன்று இன்று அதனை வைத்தே அவர்கள் கடந்த மூன்று வருடங்களாகக் காலத்தைக் கடத்தி தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர். தமிழ் மக்கள் தமது எதிர்காலம் தொடர்பாகச் சுயமாகச் சிந்திக்கும் வரையில் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள்பாடு கொண்டாட்டமாகத்தான் இருக்கும். அதனால் அவர்கள் இன ரீதியாக, இனத்துவேசமாகப் பேசி வருவதை எவருமே ஒரு பொருட்டாகக் கொள்வதில்லை. இருந்தும் தேர்தல் மேடைகளில் சிலர் தமிழினத்திற்குள் பிரதேசவாதமாகப் பேசிவருவது அம்மக்களில் பேசுபவர்களைத் தவிர வேறு எவருக்குமே உடன்பாடு இல்லை என்றே கூற வேண்டும்.
ஆனால் இன்று அரசாங்கத்துடன் பங்காளிக் கட்சியாக இருந்துவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தை விமர்சித்து வருவதனால் அரசாங்கக் கட்சியிலுள்ள முஸ்லிம் தலைவர்கள் அதனை எதிர்த்துப் பிரசாரம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இருதரப்புமே முஸ்லிம் தலைமைகளாக இருப்பதனால் அவர்களை ஆதரிக்கும் அம்மக்கள் பாடு பெரும் திண்டாட்டமாக உள்ளதுடன் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய ஒரே இனத் தலைவர்கள் இன்று கீரியும் பாம்பும் போல முட்டி மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. இது வேதனைக்குரிய ஒரு விடயமாகும்.

எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை விமர்சிப்பது என்பது ஒன்றும் புதிதல்ல. அது அவர்களது வழமையான விடயம். ஆனால் அரசாங்கத்திலிருந்து கொண்டே அரசை விமர்சிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதே அரச தரப்பிலிருக்கும் முஸ்லிம் தலைவர்களது நிலைப்பாடாகும். இதனாலேயே ஒரே இனத் தலைமைகள் தாம் சார்ந்த சமூகத்தையும் மறந்து அரசியலுக்காக தமக்குள் மோதிக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணமானவர்கள் யார்?
இந்த அரசாங்கம் பள்ளிவாசல்களை உடைக்கின்றது என்றும் அரசாங்கத்திற்கு முஸ்லிம்கள் அளிக்கும் வாக்குகள் பள்ளிவாசல்களை உடைப்பதற்கு வழங்கும் வாக்குகளாகவே அமையும் என்றெல்லாம் அரசாங்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்து வருவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனையே பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் அவர்கள் அண்மையில் புல்மோட்டையில் வைத்துத் தெரிவித்திருந்தார். இச்செயல் முஸ்லிம்களுக்கு அவமானமாக உள்ளதாகவும் அவர் பயப்படாது துணிவாகத் தெரிவித்திருந்தார்.
அஸ்வர் அவர்களது கருத்துக்கு மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது. அத்துடன் அஸ்வர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு ஒரு பகிரங்கச் சவாலையும் விடுத்திருந்தார். அதாவது அரசாங்கத்திற்கு எதிரான இத்தனை கூப்பாடு போட்டு முஸ்லிம் மக்களைத் துண்டி விட முயலும் மு.கா தலைவர் ஹக்கீம், இந்நாட்டில் எப்பகுதியி லாவது ஒரு பள்ளிவாசல் உடைக்கப்பட்டது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு இன்றுவரை மு.கா தலைவரிடமிருந்து பதிலில்லை. பதிலிருந்தால்தானே அவரால் பதிலளிக்க முடியும், இல்லாவிடின் சவாலுக்கு பதில் அளிக்க வேண்டும்.
உண்மையில் முஸ்லிம் தலைவர்கள் இவ்வாறு ஏனைய சமூகங்களும் பார்த்துப் பரிகசிக்கும் வகையில் தமக்குள் கருத்து முரண்பாடுகளை வளர்த்துக் கொள்வது நல்லதல்ல என்பதே எமது கருத்தாகும். இதனையே கிழக்குத் தேர்தல் அறிவிப்பு வெளியாகிய காலத்திலிருந்து நாம் வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகவே செல்கிறது. இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் முஸ்லிம் மக்களை சரியான பாதையில் இட்டுச் செல்ல வேண்டிய தலைமைகள் அம்மக்களைப் பிரித்தாளும் செயலில் இறங்கியுள்ளன.
இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவந்ததன் பின்னர் தமிழ் மக்களுக்கு பல்வேறு வழிகளிலும் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகப் பாடுபட்டு வருகின்றது. அதனை விளங்கிக் கொள்ளாத தமிழ்க் கூட்டமைப்பினரோ இன்னமும் புலிகளின் பாணியில் அல்லது புலிகள் ஆயுத பலத்துடன் இருப்பது போலவே அரசாங்கத்துடன் முட்டி மோதி தமிழ் மக்களுக்கு அரசு வழங்கும் சலுகைகளைக் கிடைக்க விடாது செய்து வருகின்றனர்.
இந்நிலை முஸ்லிம் மக்களுக்கும் வரவேண்டுமா? முஸ்லிம் களுக்கென தனியானதொரு கட்சி வேண்டுமென்று நினைத்து அதனைக் கனவாக்காது நனவாக்கித் தந்துவிட்டு மறைந்த மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் எண்ணங்களை, சிந்தனைகளை நாம் மீட்டிப் பார்க்க வேண்டும். அவர் எந்தவொரு அரசாங்கத்துட னும் இன்று நடப்பது போன்று கோணங்கித் தனமாக நடந்ததாக சரித்திரமே இல்லை. தனது மக்களது பலத்துடன் மிகவும் சாணக்கிய மாக அதேவேளை விட்டுக்கொடுப்புடன் அவர் செயற்பட்டார். அவர் ஸ்தாபித்த அவரது கட்சி அவரது எண்ணங்களைப் பிரதிப லிப்பதாக இன்று செயற்படுகின்றதா என்பதே எம்முன்னாலுள்ள கேள்வி? சமூக ஒற்றுமைக்காக உருவாக்கப்பட்ட கட்சி இன்று சமூகப்பிரிவினைக்கு வித்திட்டு வருகின்றதா? கேட்பது மக்கள், தீர்மானிப்பது தலைவர்கள்.
No comments:
Post a Comment