Friday, August 31, 2012

பின்தங்கியுள்ள பிரதேசங்கள் முதலில் கல்வித்தரத்தால் மேம்பாடு அடைய வேண்டும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பின ர் முருகேசு சந்திரகுமார்!

Friday, August 31, 2012
இலங்கை::பின்தங்கியுள்ள பிரதேசங்கள் முதலில் கல்வித்தரத்தால் மேம்பாடு அடைய வேண்டும் அதனூடாகவே அபிவிருத்தி செயற்பாடுகளின் பயன்களையும் இலகுவாக பெறமுடியும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மூளாய் முன்கோடை கல்வி வளர்ச்சிக் கழகத்தின் மாணவர்கள் பெற்றோர்களை (30) சந்தித்து கலந்துரையாடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், இன்று நடைபெற்று வரும் அபிவிருத்தியின் பயன்கள் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதில் நாம் அதிக அக்கறை காட்டி வருகின்றோம். இருப்பினும் ஒரு சமூகம் கல்வி ரீதியாக மேம்பாடடைகின்ற போதே அப்பகுதியின் அபிவிருத்தி செயற்பாடுகள் முழுமைபெறும் என்ற யதார்த்தத்தின் வெளிப்பாடுகளையும் இன்றைய செயற்பாடுகளினூடாக உணரமுடிகின்றது.

எனவே கல்வித்தரத்தால் பின்தங்கியுள்ள பகுதிகள் விரைவாக கல்வி மேம்பாட்டை எட்ட வேண்டிய கட்டாய சூழல் இன்று உருவாகியுள்ளது. இந் நிலையில் அவ்வாறு பின்தங்கிய பிரதேசங்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். அதற்காக பொருளாதாரத்தால் பின்தங்கிய மாணவர்கள் அப்பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளிலேயே முழுமையான கல்வியை பெறக்கூடிய சூழலை நாம் படிப்படியாக உருவாக்கி வருகின்றோம். எதிர்வரும் காலங்களில் அந்நிலைமையை பூரணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

எனவே மக்களும் இதில் அதிக அக்கறை காட்டுமிடத்து குறித்த இலக்கை விரைவாக எட்ட முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

மூளாய் முன்கோடை காளி கோவிலடி கல்வி வளர்ச்சிக்கழக மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்துரையாடிய பாராளுமன்ற உறுப்பினர் அப்பகுதி மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக கல்விசார் உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

No comments:

Post a Comment