Friday, August 31, 2012

அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்களை கொல்ல சதி: 11 பேர் கைது!

Friday, August 31, 2012
பெங்களூர்::கர்நாடக மாநிலம் பெங்களூர், ஹுப்ளியில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்களைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக 11 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களைக் கைது செய்ததன் மூலம், பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் பயங்கரவாதிகளா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தில்லி, உத்தரப்பிரதேச போலீஸார் அண்மையில் அளித்த தகவலின் பேரில், பெங்களூர் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் புதன்கிழமை இரவு பெங்களூர் மற்றும் ஹுப்ளியில் திடீர் சோதனை நடத்தினர்.

இதில், பெங்களூரில் 6 பேரையும், ஹுப்ளியில் 5 பேரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து கர்நாடக டிஜிபி அலுவலகத்தில் பெங்களூர் மாநகரக் காவல் ஆணையர் ஜோதிபிரகாஷ் மிர்ஜி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 2 மாதங்களாக உளவுத் துறையினர் அளித்த தகவலின் பேரில், சிலரை பெங்களூர் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் கண்காணித்து வந்தனர். அவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா (எல்.இ.டி.), ஹர்கத்-உர்-ஜிகாத்-அல்-இஸ்லாமி (எச்.யு.ஜெ.ஐ.) ஆகிய அமைப்புகளுடன் தொடர்பு கொண்டுள்ளது தெரிய வந்தது.

இதில், பெங்களூர் மற்றும் ஹுப்ளியில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 7.65 எம்.எம் கைத் துப்பாக்கி, 7 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது.

இவர்களைக் கைது செய்ததன் மூலம், பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது. இவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு இவர்கள் தீட்டிய சதி குறித்து மேலும் தெரிய வரும் என்றார் அவர்.

பேட்டியின் போது கர்நாடக டிஜிபி லால்ரோகுமா பச்சாவ், நகரக் கூடுதல் காவல் ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) சுனில்குமார், நகரக் கிழக்கு மண்டல இணை காவல் ஆணையர் தயானந்த் உள்ளிட்டோ ர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment