Monday, August 27, 2012புதுடெல்லி::நிலக்கரி சுரங்க ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலகாதவரை நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த விடமாட்டோம் என்பதில் பாஜ பிடிவாதமாக இருப்பதை தொடர்நது மழைக்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து டெல்லி வட்டாரங்கள் கூறியதாவது: நிலக்கரி சுரங்க உரிமைகளை தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விடாமல் தன்னிச்சையாக விலை நிர்ணயித்து வழங்கியதன் காரணமாக மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக தலைமை கணக்கு அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.
இவரது அறிக்கை கடந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ரம்ஜான் விடுமுறைக்கு பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் கூடியதும் இந்தப் பிரச்னையை பாஜ தலைமையிலான எதிர்கட்சிகள் கையில் எடுத்தன. நிலக்கரி ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என கோஷம் எழுப்பி இரண்டு அவைகளையும் முடக்கின. கடந்த வெள்ளிக்கிழமை வரை 4 நாட்களாக எவ்வித அலுவலும் நடைபெறாமல் இரண்டு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றம் முடக்கப்படுவதற்கு பாஜ கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என இடதுசாரிகளும் விருப்பம் தெரிவித்துள்ளனர். பிஜு ஜனதா தளமும் விவாதத்துக்கு ஆதரவாக உள்ளது. ஆனால் பா.ஜ., அகாலி தளம், சிவசேனா ஆகிய கட்சிகள் பிரதமர் பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. மக்களவையை சுமூகமாக நடத்துவது குறித்து நாடாளுமன்ற அரசியல் கட்சி தலைவர்களுடன் சபாநாயகர் மீராகுமார் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில் பா.ஜ. கலந்து கொள்கிறது.
இருப்பினும் பிரதமர் ராஜினாமா நிலையிலிருந்து இறங்கிவரும் பேச்சுக்கே இடமில்லை என அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி நேற்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை முடக்குவது என்ற நிலையிலிருந்து இறங்கி வர பாஜ மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அடுத்த மாதம் 9ம் தேதிவரை நடைபெறுவதாக இருந்த மழைக்கால கூட்டதொடரை முன்கூட்டியே முடித்துக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில் பிரதமர் மன்மோகன்சிங் நாளை மறுநாள் ஈரான் செல்கிறார். நாடாளுமன்றம் சுமுகமாக நடந்தால் நிலக்கரி விவகாரம் குறித்து இன்று காலை அவையில் விளக்கம் அளிப்பார். நாடாளுமன்றம் முடக்கப்படும் பட்சத்தில் தொலைகாட்சியில் அவர் உரை நிகழ்த்தலாம் என கூறப்படுகிறது.
No comments:
Post a Comment