Friday, August 31, 2012

கூடங்குளம் வழக்கில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு : அணுமின் நிலையம் செயல்பட அனுமதி!

Friday, August 31, 2012
சென்னை::கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப தடை கேட்டு தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் சென்னை ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. அனைத்து அடிப்படை வசதிகளையும் ஆராய்ந்து பார்த்துதான் அணுமின் நிலையத்துக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன என்று தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீர்ப்பால் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படுவதில் ஏற்பட்டிருந்த தடை நீங்கியது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்திய , ரஷ்ய கூட்டு தயாரிப்பில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அணுமின் நிலையம் செயல்பட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று கூறி, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக பலகட்ட போராட்டங்களையும் நடத்தினர். இதற்கிடையே, அணுஉலைகளில் எரிபொருள் நிரப்ப தடை கேட்டு வக்கீல் ராதாகிருஷ்ணன் உள்பட சிலர், சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் ஜோதிமணி, துரைசாமி விசாரித்தனர். கடந்த வாரம் இறுதி விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எரிபொருள் நிரப்ப தடை கேட்ட வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம். மத்திய, மாநில அரசுகள் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்த பிறகுதான் அணுமின் நிலையத்துக்கு அனுமதி அளித்துள்ளன. மக்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்களின் அச்சம் போக்க விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும். கூடங்குளம் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு படகுகள், நிதி உதவி உள்ளிட்ட உதவிகளை அளிக்க வேண்டும். பள்ளிகள், மருத்துவமனைகள் அமைத்து தர வேண்டும். அணுசக்தி கழகமும் மாசு கட்டுப்பாடு வாரியமும் இப்பகுதியில் அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும். இப்பகுதி மக்கள் நலனுக்காக முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்த யோசனைகளை பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர். அணுஉலைகளில் எரிபொருள் நிரப்ப தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படுவதில் ஏற்பட்டிருந்த தடை நீங்கியுள்ளது.

No comments:

Post a Comment