Thursday, August 30, 2012

ஆஸ்திரேலியா அனுப்புவதாக இலங்கை அகதிகளிடம் பல லட்சம் மோசடி: 7 பேர் கைது!

Thursday, August 30, 2012
முதுநகர்::தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களை கடலூர் துறைமுகத்தில் இருந்து கள்ளத்தோணி மூலம் ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துச் செல்ல முயன்ற ஏஜன்டுகள் உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் துறைமுகத்திலிருந்து கள்ளத்தோணி மூலம் ஆஸ்திரேலியா செல்ல முயன்ற தமிழக முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் 28 பேரை கடந்த 27ம் தேதி இரவு "க்யூ' பிரிவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில், பிடிபட்டவர்களில் 18 பேர் அகதிகளாக பதிவு செய்து முகாம்களில் தங்கியுள்ளவர்கள் என்பதும் மற்ற 10 பேர் பதிவு செய்யாத அகதிகள் என்பதும் தெரியவந்தது. இவர்களிடம் ஈரோடு மாவட்டம், பவானி சாகர் முகாம் சுந்தர், சென்னை புழல் முகாம் ரவி ஆகியோர், ஆஸ்திரேலியா சென்றால் அதிக வருமானம் ஈட்டலாம் என தெரிவித்துள்ளனர். மேலும், தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் ஏஜன்டுகளான காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தைச் சேர்ந்த ஜோதிராஜா, 49, வேதகிரி, 42, மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த வீரமணி, 48 ஆகியோர் விசைப்படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு அழைத்துச் சென்று விடுவர் எனக் கூறியுள்ளனர். அதனை நம்பி 28 பேரும் பணம் கொடுத்துள்ளனர். ஏஜன்டுகள் கூறியபடி 28 பேரும் கடந்த 27ம் தேதி கடலூர் பஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கிருந்த ஏஜன்டுகள், அகதிகள் 28 பேரையும் சுமோ காரில் கடலூர் முதுநகர் துறைமுகத்திற்கு அழைத்து வந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த அன்னை வேளாங்கண்ணி பெயர் கொண்ட (பதிவெண்: டி.என்-15-எம்.எப்.பி-42) விசைப்படகில் ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாகவும், நள்ளிரவு விசைப்படகு புறப்படும் போது ஏறிக்கொள்ளுமாறு கூறியுள்ளனர்.அந்த தகவலின் பேரில், விசைப்படகு குறித்து நடத்திய விசாரணையில், புதுச்சேரி மாநிலம், வம்பாகீரப்பாளையம் வேலு என்பவருக்கு சொந்தமானது எனவும், இந்த விசைப்படகில் கடலூர், தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த முருகன், எழில்செல்வம், குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டை முகாமில் உள்ள இலங்கைத் தமிழர் சுமன் ஆகியோர் இலங்கை தமிழர்களை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர். இதற்காக விசைப்படகின் உரிமையாளரான வேலுவிற்கு 16 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் தருவதாகவும், அதற்காக முன்பணமாக ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளது தெரியவந்தது.

ஏஜன்டுகளால் ஏமாற்றப்பட்டவர்களில் ஒருவரான ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அகதிகள் முகாமைச் சேர்ந்த கவுசல்யன், 23 கொடுத்த புகாரின் பேரில் கடலூர் துறைமுகம் போலீசார், சதித்திட்டம் தீட்டி மோசடி செய்த பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து ஏஜன்டுகள் ஜோதிராஜா, 49, வேதகிரி, 42, வீரமணி, 48, விசைப்படகின் உரிமையாளர் புதுச்சேரி, வம்பாகீரப்பாளையம் வேலு, 39, கடலூர், தேவனாம்பட்டனம் எழில்செல்வன், 30, முருகன், 30, குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டை அகதிகள் முகாமைச் சேர்ந்த சுமன், 29, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமோ கார், ஒரு பைக், 6 மொபைல் போன்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட் 2ல் நேற்று மாலை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், ஏஜன்டுகளால் ஏமாற்றப்பட்ட இலங்கை தமிழர்களில் பதிவு பெற்ற 18 பேர் அவரவர் தங்கியிருந்த முகாம்களுக்கே அனுப்பி வைக்கவும், பதிவு செய்யப்படாத மற்ற 10 பேரும் மறுவாழ்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும், இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட ஈரோடு, பவானிசாகர் முகாமில் உள்ள சுந்தர், சென்னை, புழல் முகாமில் உள்ள ரவி ஆகியோரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment