Tuesday, July 24, 2012

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களில் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது-பாதுகாப்புச் செயலாளர் கோடாபய ராஜபக்‌ஷ!

Tuesday, July 24, 2012
இலங்கை::கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் நாட்டில் இடம்பெற்றுவரும் குற்றச் செயல்களில் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது எனவும், இலங்கையில் குற்றச் செயல்கள் வெகுவாக அதிகரித்து வருவதாக கூறப்படுகின்ற போதிலும் பொலிஸாரின் கணிப்பீட்டில் குற்றச் செயல்கள் வெகுவாக குறைவடைந்து செல்வது புலப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்துடன் இணைந்து, தேசிய பாதுகாப்புக்கான ஊடக மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட குற்றம், ஊழல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக கருத்தரங்கு, நேற்று (ஜூலை-23) தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் தலைமையில் இடம்பெற்ற இக் கருத்தரங்களில் பாதுகாப்புச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்‌ஷ விசேட உரை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக் கருத்தரங்கில் மேலும் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர்,

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் குற்றச் செயல்களை தடுக்கும் விடயத்திலேயோ, குற்றவாளிகளை கைது செய்யும் விடயத்திலேயோ அரசியல் அழுத்தங்களுக்கும், தலையீடுகளுக்கும் இடமளிக்கப்படுவதில்லை என திட்டவட்டமாக கூறியதுடன், இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

பயங்கரவாதம் முறியடிக்கப்பட்ட பின்னர் நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த தேவையான பல்வேறு பாரிய திட்டங்களை அரசாங்கமும் பொலிஸாரும் அமுல்படுத்தி வருகின்றனர்.

இதனை மேலும் வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஊடகங்கள், பொதுமக்கள், சமயத் தலைவர்கள், பெற்றோர்களின் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். அந்த அடிப்படையில் மாகாண மட்டத்தில் பொலிஸ் நிலையங்களுக்கு கீழ் அதிகாரம் வழங்கப்பட்ட ஆலோசனைக் குழுக்களை நியமித்து அதன் ஊடாக குற்றச் செயல்களை தடுக்க பொது மக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார். அத்துடன் பொது மக்கள் மத்தியில் ஆயுதங்களுடன் பொலிஸார் செல்வதை தவிர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் குற்றச் செயல்கள் பெருமளவில் இடம்பெற்று வருவதாக பல்வேறு ஊடகங்கள் அறிக்கைகளையும், செய்திகளையும் வெளியிட்டு வருகின்றன. குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸில் பதிவாகியுள்ள புள்ளி விபரங்களின் படி அது அடிப்படை அற்ற செய்திகளாக நான் கருதுகிறேன்.

2011ம் ஆண்டில் 54,521 குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன. எனினும் இந்த ஆண்டில் இதுவரை 30,328 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 1990ம் ஆண்டு 48,264 சம்பவங்களும் 2006ம் ஆண்டு 60,161 குற்றச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 1993 ஆம் 1994 ஆம் ஆண்டுகளில் குற்றச் செயல்கள் அதிகரித்து காணப்பட்டதுடன் 2009 ஆம் ஆண்டு அது 13.7 வீதமாக குறைந்துள்ளது.

அதேபோன்று 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் கணக்கெடுக்கப்பட்டு அவை தற்பொழுது புள்ளி விபரத்தில் சேர்க்கப்படுகின்றன.

இந்த நிலையில் பொலிஸ் மா அதிபரினால் எனக்கு தரப்பட்ட 1990 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டுவரையிலான புள்ளி விபரத்தை ஒப்பிட்டு பார்க்கையில் வெகுவாக குறைந்துள்ளதை காணமுடிகின்றது. அதேபோன்று வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் படையினரால் பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்று வெளிநாட்டு தூதுவர் ஒருவரும் கூறினார்.
அந்த தகவல்களின் அடிப்படையில் தகவல்களை திரட்டினேன். பொலிஸாரின் தகவல்களின் அடிப்படையில் அல்ல, நலன்புரி நிலையங்களின் தகவல்களின் அடிப்படையில் அது உண்மைக்கு புறம்பானது என்பது தெரியவந்துள்ளது.

வவுனியாவில் இவ்வாறான துஷ்பிரயோகச் சம்பவம் மூன்று பதிவாகியுள்ளன. அது இராணுவத்திலிருந்து விலகிச் சென்றவர்களினால் அதுவும் சிங்கள கிராமத்திலாகும். ஆனால் ஆய்வுகளின்படி நான்கு விடயங்களின் அடிப்படையில் வடக்கு, கிழக்கில் துஷ்பிரயோகச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

1. உறவினர்கள், 2. அண்டை வீட்டார்கள், 3. தெரிந்தவர்கள் இவற்றில் அடங்குவர். ‘தந்தை, மாமா, சகோதரர், மைத்துனர், நண்பர்கள், வளர்ப்பு தந்தை ஆகியோரினாலேயே இந்த துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கணிப்பீட்டின் இறுதியான தகவல்களின் அடிப்படையில் பாதுகாவலர்கள் என்று பொறுப்பு சாட்டப்பட்டவர்களினாலேயே இந்த துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை அடிப்படையற்ற நிலையில் ஊடகங்கள் பாதுகாப்பு படையினர் மீது சுமத்துகின்றன என்றார்.

குற்றச் செயல்கள் தொடர்பிலும், அதனை கட்டுப்படுத்தும் விடயத்திலும் அரசாங்கமும் பொலிஸாரும் பொறுப்பு கூற வேண்டும். ஆனால் அது எல்லா விடயத்திலும் முடியாத ஒரு விடயமாகும்.

கொலை, கொள்ளை, பாதாள உலகம், போதைப் பொருள் பாவனை போன்ற விடயங்களில் பொலிஸார் செயற்பட முடியும். துஷ்பிரயோகம் விடயத்தில் நூறு வீதம் பொலிஸாரினாலோ, பாதுகாப்பு படையினராலோ தடுக்க முடியாது. பெற்றோர்கள், சமய தலைவர்கள், கிராம தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டியதுடன், பொறுப்பு கூற வேண்டும் என்றார்.

எந்த ஒரு குற்றவாளிக்கும் அரசாங்கம் பாதுகாப்பு வழங்காது. குற்றம் இழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் வடக்கு, கிழக்கிலிருந்து ஆயுதக் குழுக்கள் நிராயுதபாணிகளாக்கப்பட்டுள்ளன.

பலவந்த குடியேற்றம் தொடர்பில் ஏராளமான முறைப்பாடுகள் கிடைக் கப்பெற்றன. அவைகளில் பெரும்பாலானவற்றுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது. அதேபோன்று பாதாள உலக கோஷ்டிகளின் செயற்பாடுகளை முறியடிக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. சட்டத்திலுள்ள சில குறைபாடுகளினால் குற்றம் செய்யக்கூடியவர்கள் மீண்டும் மீண்டும் தவறுகளை, குற்றச் செயல்களை செய்ய முற்படுகின்றனர்.

பல்வேறு பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் ஏதாவது ஒரு சிறிய குற்றத்திற்காக பொலிஸாரிடம் சரணடைந்து நீதித்துறையிலுள்ள சலுகைகளை பயன்படுத்தி பிணை பெற்று வெளிநாட்டுக்குச் சென்ற பின்னர் அங்கிருந்து தமது பழைய நடவடிக்கைகளை வழிநடத்துகின்றனர்.

குற்றச் செயல்கள் அதிகரித்துக் காணப்படுவதாக கூறுகின்றவர்கள் 3 தசாப்தங்களாக நிலவிய குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் சிந்திக்க வேண்டும். முன்னர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே பஸ்ஸில் செல்வதற்கு அச்சம் கொள்வர் குண்டு வெடிப்பு காரணமாக. ஆனால் தற்போது இந்த நிலைமை மாற்றப்பட்டுள்ளது-

குற்றச் செயல்கள் தொடர்பில் ஊடகங்கள் செய்திகளை வெளியிடக் கூடாது என்று நான் கூற முற்படவில்லை. மாறாக செய்திகளை வெளியிடும் போது மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். பிடிவிறாந்து விடுக்கப்பட்டவர்களை ஏன் தேடி கைது செய்வதில்லை என்று சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. அதனை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்ததில் அதிகமானவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த முடிந்தது. அதுபோன்ற நல்ல விடயங்களும் ஊடகச் செய்திகளின் ஊடாக இடம் பெறுகின்றன. எனவே குற்றச் செயல்களை தடுக்க அரசாங்கமும், பொலிஸாரும் பாரிய நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்கின்றனர்.

பயங்கரவாதத்தை திட்டமிட்ட அடிப்படையில் முறியடித்தது போன்று குற்றச் செயல்களும் திட்டமிட்ட அடிப்படையில் முறியடிக்கப்படும் என்றார். பயங்கரவாதம் முறியடிக்கப்பட்ட பின்னர் நாட்டில் பாரிய அபிவிருத்திப் பணிகள் இடம்பெறுகின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிடும் பட்சத்தில் அது நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே மக்களை குழப்பத்தில் ஆழ்த்தாமல் தெளிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். அப்போது சிறந்த பெறுபேறுகளை காண முடியும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

இக் கருத்தரங்கில் தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மையத்தின் பொதுப் பணிப்பாளர் திரு.லக்‌ஷ்மன் ஹுலுகெல்ல, அரச தகவல் திணைக்களத்தின் பொதுப் பணிப்பாளர் பேராசிரியர் ஆரியரத்தின அதுகல்ல, ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் உட்பட பல ஊடகவியலாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

No comments:

Post a Comment