Tuesday, July 24, 2012

முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு வாழ்வாதாரக் கடனுதவி!

Tuesday, July 24, 2012
இலங்கை::புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள 1,200 க்கும் அதிகமான முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு வாழ்வாதாரத் திட்டங்களுக்காக, அரச கடனுதவி வழங்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், 12,000 க்கும் அதிகமான முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் அவர்களைப் பற்றிய தவறான குற்றச்சாட்டுக்கள் மற்றும் தவறான தொடர்புகள் என்பன வரவில்லை எனத் தெரிவித்தார்.
முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு, அவர்களை சமூகத்துடன் இணைத்தது மற்றுமின்றி, நாட்டின் தேசிய பொருளாதாரத்துக்கு பங்களிப்பு செய்வதற்கான வழியையும் வகுத்துக்கொடுத்துள்ளோம் எனவும், இவர்களுக்கான இக்கடனுதவியானது 4 வீத வட்டியுடன் 10 ஆண்டுகளில் மீளச் செலுத்தக்கூடிய வகையில் திட்டமிடப்பட்டுள்ளதுடன், முதல் ஆண்டில் அவர்கள் வட்டித்தொகையை மாத்திரம் செலுத்துதல் போதுமானதாகும் எனவும் தெரிவித்தார்.

இவர்களுக்கான இக்கடனுதவியானது எதிர்வரும் ஜூலை 30 அம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் வைத்து வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சுயதொழில், சிறு கைத்தொழில் மற்றும் விவசாயத் திட்டங்களில் மூதலீடு செய்யவென 250,000 ரூபா உயர்ந்த பட்சக் கடன்தொகை இவர்களுக்காக வழங்கப்படவுள்ளது. இக்கடன்களை வழங்குவதற்காக இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி போன்றன முன்வந்துள்ளன.

No comments:

Post a Comment