Tuesday, July 24, 2012

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி தமிழக மீனவர்களை பற்றி கடுகளவும் கவலைப்படவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்!

Tuesday, July 24, 2012
கரூர்::கரூர் வருகை தந்த பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரியில் தண்ணீர் வர வில்லை, முல்லைப்பெரியாறு பிரச்சினை, பாலாறு பிரச்சினை இப்படி பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் விவசாயம் அழிந்து வரும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள விவசாய நிலங்களின் அளவு சுருங்கி கொண்டு வருகிறது. விவசாய நிலங்கள் தற்போது வணிக தளங்களாகவும், வீடுகளாகவும், தொழில் கூடங்களாகவும் மாறி வருகின்றன.

இதே நிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தில் விவசாயம் செய்ய நிலம் இருக்காது. விவசாயிகளும் இருக்க மாட்டார்கள். அண்டை மாநிலங்கள் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரை தரவேண்டும். தண்ணீர் இல்லாததால் ஆறுகளில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. தமிழ் நாட்டில் அனைத்து ஆறுகளிலும் மணல் கொள்ளை திட்டமிட்டு நடந்து வருகிறது.

கரூர் மாவட்டத்தில் அரசு விதிகளை மீறி மணல் அள்ளுவதில் தனி ஒரு அரசாங்கமே நடைபெற்று வருகிறது. தொடர்ந்து காவிரியில் மணல் எடுத்தால், காவிரியில் தண்ணீர் வந்தாலும், வந்த தண்ணீர் வயலுக்கு செல்வதற்கு ஆறு இல்லாமல் போய் விடும்.

எனவே காவிரி தாயை காப்பாற்றும் பொறுப்பு தமிழக முதல்வர் அம்மா கையில் இருக்கிறது. தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் துன்புறுத்தி வருகின்றனர். தற்போது 23 மீனவர்களை கைது செய்து உள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 3 முறை தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையை இழந்து வருகிறார்கள். மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு தமிழக மீனவர்களை பற்றி கடுகளவும் கூட கவலைப்பட வில்லை. இதை பாரதீய ஜனதா கட்சி கண்டிக்கிறது. எனவே மீனவர்களை காப்பாற்ற பிரதமர், உள்துறை மந்திரி ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தமிழக முதல்வர் குரல் கொடுத்து மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை ராணுவப்படைக்கோ, கடற்படைக்கோ, விமானப்படைக்கோ எந்த காரணம் கொண்டும் இந்தியாவில் பயிற்சி அளிக்ககூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment