Wednesday, July 4, 2012

ராஜிவ் காந்தி படுகொலைக்கு பின் சோனியா காங். தலைவராக நரசிம்மராவ் எதிர்த்தார்!

Wednesday,July 04, 2012
புதுடெல்லி::ராஜிவ் காந்தி படுகொலைக்கு பிறகு சோனியா காந்தியை காங்கிரஸ் தலைவராக்க நரசிம்மராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் என்று அர்ஜுன் சிங்கின் சுயசரிதை நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரான அர்ஜுன் சிங்கின் சுயசரிதை நூல் அவரது மரணத்துக்கு பிறகு இப்போது வெளியிடப்பட உள்ளது. 383 பக்க புத்தகம் எழுதி முடிக்கப்படாத நிலையில் அர்ஜுன் சிங் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறந்துவிட்டார். அதை முழுமைபடுத்தும் பணியை அர்ஜுன் சிங்கின் நண்பர்கள், உறவினர்கள் உதவியோடு நூலின் இணை ஆசிரியர் அசோக் சோப்ரா மேற்கொண்டார். இதையடுத்து, அந்த புத்தகம் தற்போது வெளியிட தயாராக உள்ளது. அதில் அர்ஜுன் சிங் எழுதியிருப்பதாவது:

1991 மே மாதம் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சோனியா காந்தியை காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திட்டமிட்டோம். இந்த யோசனையை நரசிம்மராவிடம் தெரிவித்ததும் அவர் ஆத்திரம் அடைந்தார். காங்கிரஸ் கட்சியை நேரு குடும்ப இன்ஜினால் இழுக்கப்படும் ரயிலாக ஏன் நினைக்கிறார்கள். மாற்று தலைவர்களே இல்லையா என்று நரசிம்ம ராவ் எரிந்து விழுந்தார். இதை கேட்ட நானும் மற்ற தலைவர்களும் அதிர்ச்சி அடைந்தோம். அரசியலின் கோர முகத்தை அப்போதுதான் நான் பார்த்தேன்.

ஆனால், அப்போது அகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக இருந்த சீதாராம் கேசரி, தலைவர் பதவியை ஏற்கும்படி சோனியாவை முதலில் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து, நேரு குடும்பத்துக்கு எதிரான தனது எதிர்ப்புணர்வை வெளிப்படையாக காட்டிவிட்டோமே என்பதை உணர்ந்த நரசிம்மராவ் பின்வாங்கினார். தலைவர் பதவியை ஏற்கும்படி சோனியாவை கேட்பதில் தவறு இல்லை. ஆனால், அதை சோனியா ஏற்பாரா என்று பதில் கேள்வி கேட்டார்.

1992ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அப்போதுநான் பஞ்சாபில் இருந்தேன். தகவல் கிடைத் ததும் பிரதமரின் வீட்டுக்கு போன் செய்தேன். ஆனால், நரசிம்மராவ் தனி அறைக்கு சென்று உள்ளே பூட்டிக்கொண்டதாக தகவல் கிடைத்தது. அப்போது, ரோம் நகரம் பற்றிஎரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னன்தான் என் நினைவுக்கு வந்தார்.

அதற்கு முந்தைய நாள்தான் நரசிம்மராவை சந்தித்து பேசினேன். அப்போது, பாபர் மசூதி இடிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தேன். அது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அமைதியாகவே இருந்தார். அந்த விவகாரத்துக்கு நரசிம்மராவ் முக்கியத்துவம் தரவில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். அயோத்தி பிரச்னையில் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்க நரசிம்மராவ் முயற்சி செய்தார். ஒரு கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பாலாசாகிப் தேவரசுடன் பேச முடிவு செய்தார். ஆனால், அதை நான் கடுமையாக எதிர்த்தேன். பிரச்னைக்கு தீர்வு காண வழிதெரியாமல் நரசிம்மராவ் தவித்தார். இப்படி பரிதாபகரமான நிலையில் வேறு எந்த அரசும் இருந்தது இல்லை.
இவ்வாறு அர்ஜுன் சிங் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment