Wednesday, July 4, 2012

ஜனாதிபதி தேர்தலில் சிக்கல் தீர்ந்தது:பிரணாப் - சங்மா நேரடி போட்டி!

Wednesday,July 04, 2012
புதுடெல்லி::ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டார். ஆதாயம் தரும் பதவியில் பிரணாப் இருப்பதால் அவரது வேட்பு மனுவை ஏற்க கூடாது என்ற சங்மாவின் புகார் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, பிரணாப்&சங்மா இடையே நேரடிப் போட்டி உறுதியாகியுள்ளது. இதனிடையே, துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் 19ம் தேதி நடக்கிறது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜி போட்டியிடுகிறார். இதற்காக, மத்திய நிதியமைச்சர் பதவியை பிரணாப் ராஜினாமா செய்தார். கடந்த மாதம் 28ம் தேதி பிரணாப் முகர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்தார். பா.ஜ. அதிமுக, பிஜூ ஜனதா தளம் ஆதரவுடன் போட்டியிடும் சங்மாவும் அன்று மனு தாக்கல் செய்தார். மொத்தம் 42 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. பிரணாப், சங்மா தவிர மற்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

நேற்று முன்தினம் மனுக்கள் பரிசீலனையின்போது சங்மாவின் வழக்கறிஞர் சத்பால் ஜெயின், பிரணாப்புக்கு எதிராக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார். இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் (ஐ.எஸ்.ஐ.) தலைவர் பதவியில் பிரணாப் முகர்ஜி இருப்பதாகவும் ஆதாயம் தரும் பதவியில் இருப்பதால் பிரணாபின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரினார்.

இதை காங்கிரஸ் மறுத்தது. வேட்பு மனுதாக்கலுக்கு முன்பே ஜூன் 20ம் தேதியே ஐ.எஸ்.ஐ. தலைவர் பதவியை பிரணாப் ராஜினாமா செய்து விட்டதாக காங்கிரஸ் கூறியது. பிரணாப் தரப்பில் தேர்தல் அதிகாரியிடம் பதில் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தது. பிரணாப் வகித்தது ஆதாயம் தரும் பதவி அல்ல என்றும் இதற்காக அவர் ஊதியமோ சலுகைகளோ பெறவில்லை என்றும் ஐ.எஸ்.ஐ. விளக்கம் அளித்தது.

இதனால், மனு பரிசீலனை நேற்றும் நடந்தது. தேர்தல் அதிகாரி வி.கே.அக்னிஹோத்ரி முன் பிரணாப் தரப்பில் அவரது அதிகாரபூர்வ பிரதிநிதியும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருமான பி.கே.பன்சால், உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆஜராயினர். வேட்பு மனு தாக்கலுக்கு முன்பே ஐ.எஸ்.ஐ. தலைவர் பதவியை பிரணாப் ராஜினாமா செய்து அந்நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டு விட்டதையும் சுட்டிக்காட்டினர். இதை தேர்தல் அதிகாரி அக்னிஹோத்ரி ஏற்றுக் கொண்டார். சங்மாவின் புகாரில் அடிப்படை ஆதாரம் இல்லாததால் அதை நிராகரித்து, பிரணாபின் வேட்பு மனு ஏற்கப்படுவதாக அக்னிஹோத்ரி அறிவித்தார். இத்தகவலை பின்னர் நிருபர்களிடம் பன்சால் தெரிவித்தார்.

நேரடி போட்டி: பிரணாப், சங்மா வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தலில் இருவருக்கும் இடையே நேரடிப் போட்டி உறுதியாகியுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தல்: இதனிடையே, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ம் தேதி முடிகிறது. அப்பதவிக்கு ஆகஸ்ட் 7ம் தேதி தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

தேர்தல் அறிவிக்கை ஜூலை 6ம் தேதி வெளியிடப்படுகிறது. அன்றே வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 20. மறுநாள் மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. மனுக்களை வாபஸ் பெறுவதற்கு 23ம் தேதி கடைசி நாள். ஆகஸ்ட் 7ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர் மாநிலங்களவை தலைவராகவும் இருப்பார். துணை ஜனாதிபதியை நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த மொத்தம் 790 எம்.பி.க்கள் ஓட்டளித்து தேர்ந்தெடுப்பார்கள். ஜனாதிபதி தேர்தலை போல அல்லாமல், இரு அவைகளை சேர்ந்த நியமன எம்.பி.க்களும் இந்த தேர்தலில் ஓட்டளிக்க தகுதி பெற்றவர்கள். துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்பவரை 20 எம்.பி.க்கள் முன்மொழியவும் அதே அளவிலான எம்.பி.க்கள் வழிமொழியவும் வேண்டும்.
மக்களவை செயலாளர் தேர்தல் அதிகாரியாக செயல்படுவார்.

சங்மா மனுவும் ஏற்பு

மனுக்கள் பரிசீலனையின்போது சங்மாவுக்கு எதிராகவும் புகார்கள் கூறப்பட்டன. சங்மா வேட்பு மனுவில் முன்மொழிந்தவர்கள் பட்டியல் ஒழுங்கற்று இருப்பது போன்ற சில குறைகள் காங்கிரஸ் தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டன. எனினும், தேர்தல் அதிகாரி அவற்றை நிராகரித்து சங்மாவின் மனு ஏற்கப்படுவதாக நேற்று அறிவித்தார்.

No comments:

Post a Comment