Tuesday, July 3, 2012

சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப்பாதையில் நிறைவேற்றமுடியாது: மத்திய அரசு தகவல்!

Tuesday, July 03, 2012
புதுடில்லி::சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றுவது பொருளாதார ரீதியாகவும், சுற்றுச் சூழல் ரீதியாகவும் சாத்தியமில்லாத ஒன்று என, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற ராமர் சேது பாலத்தை இடிப்பது என, தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இந்த ராமர் சேது பாலம், கடவுள் ராமரின் வானர சேனைகளால் உருவாக்கப்பட்டது என, இந்துக்களால் நம்பப்படுவதால், அதை இடிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்க, பிரபல சுற்றுச் சூழல் ஆய்வாளர் பச்சவ்ரி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது.

இந்நிலையில், சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு, நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் டாட்டூ மற்றும் பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரோகிண்டன் நாரிமன், ""சேது சமுத்திர திட்டம் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட பச்சவ்ரி தலைமையிலான குழு, ராமர் சேது பாலத்தை இடிக்காமல், மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவது என்பது, பொருளாதார ரீதியாகவும், சுற்றுச் சூழல் ரீதியாகவும் சாத்தியமில்லாத ஒன்று என, தெரிவித்துள்ளது. இருந்தாலும், அந்த அறிக்கை மீது, மத்திய அமைச்சரவை இன்னும் முடிவெடுக்கவில்லை,'' என்றார்.

இதையடுத்து, சேது சமுத்திர திட்டத்தின் எதிர்கால முன்னேற்றம் குறித்து, எட்டு வார காலத்திற்குள் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment