Saturday, July 7, 2012

இலங்கை வீரர்கள் வெளியேற்றம்பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு!

Saturday, July 07, 2012
சென்னை::சென்னை தாம்பரம் விமானப் படைத் தளத்தில் பயிற்சிக்கு வந்துள்ள, இலங்கை வீரர்கள் ஒன்பது பேரை, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் திருப்பி அனுப்பியுள்ளது.
இலங்கை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது என, தமிழக கட்சிகள் ஒரு சேர குரல் எழுப்பியதைத் தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.பயிற்சி:இலங்கை விமானப் படையைச் சேர்ந்த ஒன்பது வீரர்கள், பயிற்சிக்காக சென்னை தாம்பரம் விமானத் தளத்துக்கு கடந்த வாரம் வந்தனர்.

இரு நாடுகளுக்கு இடையே செய்யப்பட்டுள்ள ராணுவ உடன்படிக்கையின் அடிப்படையில், இவர்கள் பயிற்சிக்கு வந்துள்ளனர். இந்நிலையில், இலங்கைத் தமிழர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி, அவர்களை இரண்டாம் தர மக்களாக, இலங்கை அரசு நடத்தி வரும் நிலையில், அந்நாட்டு வீரர்களுக்கு, ராணுவப் பயிற்சி அளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களை உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகனுக்கு கடிதம் எழுதினார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ மற்றும் தே.மு.தி.க., மனித நேய மக்கள் கட்சி, தமிழக காங்கிரஸ் உள்ளிட்டோர், இலங்கை வீரர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும், தாம்பரம் விமானப் படைத் தளம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்ப்பு:தமிழகத்திலிருந்து எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, இலங்கை வீரர்களை திருப்பி அனுப்பும் முடிவை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் எடுத்துள்ளது. இதுகுறித்து, பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் வலியுறுத்தலின் பேரில், தாம்பரம் விமானப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த இலங்கை வீரர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.இவ்வாறு, பாதுகாப்பு அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதனிடையே இலங்கை வீரர்கள், கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டனர் என, செய்தி வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment