Sunday, July 1, 2012

அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி வரிச்சலுகை இலங்கைக்கு தொடர்ந்தும் வழங்கப்படும்!

Sunday, July, 01, 2012
இலங்கை::எவ்வித மாற்றங்களும் இன்றி அமெரிக்காவின் ஜீ.எஸ்.பி வரிச்சலுகை இலங்கைக்கு வழங்கப்படும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

இலங்கையில் தொழிலாளர் உரிமைகள் குறித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த முறைப்பாடு தொடர்பான மீளாய்வு நிறைவடைந்துள்ள நிலையில் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க தொழிலாளர் சங்கம் மற்றும் கைத்தொழில் அமைப்புக்களின் காங்கிரஸ் ஆகியன கூட்டாக தாக்கல் செய்திருந்த முறைப்பாட்டின் அடிப்படையில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ரொன் கர்க் இது தொடர்பான மீளாய்வினை மேற்கொண்டிருந்தார்.

தொழிலாளர் உரிமைகளுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை சமர்ப்பித்திருந்த விடயங்கள் திருப்தியளிக்கக்கூடிய மட்டத்தில் நிலவுவதாக ரொன் கூறியுள்ளார்.

இரு நாடுகளினதும் அரசாங்கங்கள் இலங்கையின் தொழிலாளர்கள் உரிமைககள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜீ.எஸ்.பி. சலுகையின் கீழ் சுமார் ஐயாயிரம் வகையான பொருட்களை வரி விலக்குடன் அந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்காக அபிவிருத்தி அடைந்து வருகின்ற 128 நாடுகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டில் இந்த வரிச்சலுகையின் கீழ் இலங்கை 135 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment