Wednesday, July 4, 2012

குடிபோதையில் வாகனம் ஓட்டினால் கைது: 6 மாதத்தில் 10 ஆயிரம் பேர் மீது வழக்கு!!!

Wednesday,July 04, 2012
சென்னை::சென்னையில் குடிப்பழக்கம் இல்லாத வாலிபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு மது போதைக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தங்களது வீட்டு விழாக்களாக இருந்தாலும் சரி.... நண்பர்களின் வீட்டு விசேஷங்களாக இருந்தாலும் சரி.... அங்கு முதன்மையாக நடப்பது மது விருந்துதான்.

இதுமட்டுமின்றி வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குடித்து விட்டு கும்மாளம் அடிப்பதை சென்னை வாலிபர்கள் தலையாய கடமை போலவே செய்து வருகிறார்கள்.

பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடையே புகை பிடிக்கும் பழக்கமும், மது அருந்தும் பழக்கமும் எளிதாக தொற்றிக் கொள்கிறது. இவர்கள் கல்லூரி செல்லும் போது முழு நேர போதைக்கு அடிமையாகி தங்கள் வாழ்க்கையையே தொலைத்து விடுகிறார்கள்.

போதைக்கு அடிமையாகும் வாலிபர்கள் தங்களது எதிர்காலத்தை பற்றி சிறிதும் சிந்திக்காமலேயே செயல்படுகிறார்கள். குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் ஆபத்து என்பதை உணராமல், மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் பறக்கிறார்கள். இதுபோன்று போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இப்படி விபத்தில் சிக்குபவர்களில், 20 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட வாலிபர்களே அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா கூறியதாவது:-

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2009-ம் ஆண்டில் 2900 பேர் மீதும், 2010-ம் ஆண்டில் 2335 பேர் மீதும், 2011-ம் ஆண்டில் 6 ஆயிரத்து 538 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இதுவரையில் (6 மாதத்தில்) 10 ஆயிரம் வழக்குகள் போடப்பட்டுள்ளன. குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப் புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

குடிபோதையில் வாகனங்கள் ஓட்டிச் செல்பவர்களை போக்குவரத்து போலீசார் மடக்கி கைது செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ஸ்பார்ட் பைன் விதிக்கப்படுவதில்லை. மொபைல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

குடிபோதையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியவர்கள் மீது ஆரம்பத்தில் (304ஏ, ஐ.பி.5) விபத்து மரணம் என்ற சட்டப்பிரிவின் கீழ் மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டு வந்தது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் குடிபோதையில் வாகனங்களை ஓட்டி வந்து உயிரிழப்புகளை ஏற்படுத்துவர்கள் மீது கொலை வழக்குக்கு இணையான சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது இதுபோன்ற விபத்துகளில் உயிரிழப்புகளை ஏற்படுத்துபவர்கள் மீது 304 (ஏ) ஐ.பி.5 (போதையில் வாகனம் ஓட்டினால் நிச்சயம் உயிரிழப்பு ஏற்படும் என்று தெரிந்தே வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்துதல்) என்ற சட்டப்பிரிவில் சம்பந்தப்பட்டவரை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.

மது குடிப்பது, புகை பிடிப்பது, பான்பராக், மாவா, புகையிலை போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவதை இன்றைய இளைஞர்கள் ஒரு ஸ்டைலாகவே கருதுகிறார்கள். இதுதான் அவர்களை வருங்காலத்தில் பெரிய ஆபத்தில் போய் சிக்க வைக்கிறது. பலர் இளம் வயதிலேயே மரணத்தை தழுவுகிறார்கள். பலர் மது பழக்கத்தை கைவிட முடியாமல், தவித்து வருகிறார்கள்.

நாளை முதல் குடிக்க மாட்டேன் என தினமும் சத்தியம் செய்யவும் இவர்கள் தயங்குவதில்லை. மாணவர்கள் மத்தியில் பரவிக் கிடக்கும் புகைப்பழக்கமும், மதுப் பழக்கமும் அவர்களை படிப்பில் கவனம் செலுத்த விடாமல் செய்து விடுகிறது.

5-ம் வகுப்பை தாண்டிய உடனேயே முதலில் அவர்களை புகைப்பிடிக்கும் பழக்கம் தொற்றிக் கொள்கிறது. முதலில் மறைந்து இருந்து புகை பிடிக்க தொடங்கும் இந்த மாணவர்கள், அதற்காக சிறுவர் பூங்காக்களை தேர்வு செய்கிறார்கள்.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மாதவரம் பால் பண்ணை பூங்காவில் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி சீருடையுடன் வந்த மாணவர்கள் சுமார் 10 பேர் ஓரமாக சென்று அமர்ந்தனர். அவர்களில் 5 மாணவர்கள் ஹாயாக புகை பிடித்து, பூங்காவில் இருந்த பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

அவர்களில் போதை தலைக்கேறிய நிலையில், மாணவர் ஒருவர், அடிச்சது இன்னும் ஏறலைடா... இன்னொரு குவார்ட்டர் வாங்கி கொடுடா... என்று சக மாணவனிடம் கேட்டதையும் காணமுடிந்தது.

இதுமட்டுமின்றி பள்ளிப் பருவத்திலேயே, மாணவ-மாணவிகள் காதலில் விழுவதையும் கண்கூடாக பார்க்க முடிகிறது. எழும்பூர் ரெயில் நிலைய பஸ்நிறுத்தம் (பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது) அருகில், மறைவான இடங்களில் அமர்ந்து கொண்டு, பள்ளி மாணவ-மாணவிகள் சிலர் சீருடையுடன் காதல் மொழி பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இவர்களில் ஒரு சில மாணவர்கள், மாணவிகளிடம் எல்லை மீறி நடந்து கொள்வதையும் பார்க்க முடிகிறது. இப்படி திசைமாறிச் செல்லும் இளைய சமுதாயத்தினர் மது போதை மற்றும் காதல் போதையில் இருந்து விடுபட்டால்தான் அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

No comments:

Post a Comment