Friday, June, 22, 2012இலங்கை::ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனும் அவசரமாக இலங்கைக்கு வரவேண்டிய தேவை என்ன? என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கேள்வியெழுப்பியது.
மேற்படி இருவரையுமே நாட்டிற்குள் அனுமதிப்பது ஆபத்தானதாகும். எனவே அரசாங்கம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் எவ்வாறாயினும் நவநீதம்பிள்ளை மற்றும் சிவசங்கர் மேனனின் வருகையினைக் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கூறுகையில்;
சர்வதேசத்தின் தலையீடுகள் தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டுடன் செயற்பட வேண்டும். நவநீதம் பிள்ளையை நாட்டுக்கு வருமாறு அழைக்கின்றமையானது முட்டாள்தனமான செயற்பாடாகும். உள்நாட்டு யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரும் ஐ.நா. வோ நவநீதம் பிள்ளையோ இலங்கைக்கு நன்மை ஏற்படும் வகையில் செயற்படவில்லை. மாறாக நாட்டிற்கும் இராணுவத்திற்கும் எதிரான நடவடிக்கைகளையே முன்னெடுத்தனர்.
எனவே ஐ.நா. பிரதி நிதி தொடர்பில் எவ்விதமான நம்பிக்கையினையும் வைக்க இயலாது. அதே போன்றுதான் இந்தியாவும், வெளியில் நண்பனைப் போல் காட்டிக்கொண்டு உள்ளே அமெரிக்காவுடன் கூட்டணியினை அமைத்து இலங்கைக்கு எதிரான தீர்மானங்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்குகின்றது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் திடீரென இலங்கை வருகின்றமையானது பல சந்தேகங்களையே தோற்றுவித்துள்ளது.
எனவே அரசாங்கம் மேற்படி இருவரின் வருகை தொடர்பிலான உண்மையான நிகழ்ச்சி நிரலை நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும்.பொது மக்கள் மிகவும் அவதானத்துடனேயே உள்ளனர். தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இவர்களின் வருகையினை வன்மையாக கண்டிக்கின்றது எனக் கூறினார்.
No comments:
Post a Comment