Friday, June, 22, 2012கேன்பரா::ஆஸ்திரேலிய பகுதியில் 200 பேர் சென்ற படகு பாரம் தாங்காமல் கடலில் மூழ்கியது. இதில் 110 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 90 பேர் கடலில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைய, ஈரான், ஆப்கானிஸ்தான், இலங்கை, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து பலர் படகுகளில் சட்டவிரோதமாக வருகின்றனர். இந்தோனேசியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் உள்ள கிறிஸ்துமஸ் தீவுக்கு முதலில் வருகின்றனர். இந்த தீவு ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமானது. இங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் ஊடுருவுகின்றனர். இந்தோனேசியாவுக்கு அருகில் இந்த தீவு உள்ளது. இந்நிலையில் நேற்று ஒரு படகில் 200க்கும் அதிகமானோர் படகில் கிறிஸ்துமஸ் தீவு நோக்கி சென்று கொண்டிருந்தனர். பாதி வழியில் திடீரென படகு கவிழ்ந்து அனைவரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். தகவல் அறிந்து ஆஸ்திரேலிய கப்பற்படை கப்பல்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டன. அப்போது 110 பேர் மீட்கப்பட்டனர். மற்றவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. இதுகுறித்து மேற்கு ஆஸ்திரேலியா போலீஸ் கமிஷனர் கார்ல் ஓகல்லாகான் கூறுகையில், கடலில் மூழ்கிய 90 பேரை தேடும் பணி இரவிலும் நடந்தது. எனினும் யாரும் மீட்கப்படவில்லை. உடல்களும் கடலில் மிதக்கவில்லை. அனைவரும் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. எனினும் உறுதியாக இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. மீட்புப் பணி தொடர்ந்து நடக்கிறது என்றார்.
No comments:
Post a Comment