Sunday, June 24, 2012

ஓட்டமாவடியில் வான் ஒன்று பழக்கடைக்குள் புகுந்து விபத்து; மூவர் காயம்:-மாணவனுக்கு எமனாக மாறிய இராணுவ பிக்அப்!

Sunday, June, 24, 2012
இலங்கை::வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஓட்டமாவடி எம்.பீ.சீ.எஸ். வீதியில் இன்று வான் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பழக் கடைக்குள் புகுந்ததில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடியில் இருந்து மீறாவோடைக்குச் செல்லும் எம்.பி.சீ.எஸ். வீதியில் பயணித்த வான் வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலயத்திற்கு முன்னாள் உள்ள பழக்கடைக்குள் புகுந்ததில் கடையில் பழம் வாங்குவதற்கு நின்ற ஒன்பது வயதுச் சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மேற்படி சிறுமி பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சாரதியை பொதுமக்கள் தாக்கிய நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்துச் சமப்வம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

கல்விச் சுற்றுலா சென்று திரும்பிய மாணவனுக்கு எமனாக மாறிய இராணுவ பிக்அப்!

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் பிரதான வீதியில் இராணுவ வாகனமொன்று மோதியதால் 13 வயது நிரம்பிய பாடசாலை மாணவனொருவன் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை தம்பிலுவில் பிரதான் வீதி ஏ.பி.சி. சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. சத்யராஜ் பரன்ராஜ் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது பாடசாலையினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கல்விச் சுற்றுலாவில் பங்கேற்று விட்டு ஊர் திரும்பிய இம்மாணவன் பாடசாலை வாகனத்தில் இருந்து இறங்கி வீதியை கடக்க முயன்றவேளையில் இராணுவ பிக்அப் வாகனமொன்று இவரை மோதியுள்ளது. இதனால் அந்த இடத்திலேயே இம்மாணவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அவசர அவசரமாக திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலைக்கு இச்சிறுவன் கொண்டு செல்லப்பட்டபோது அவன் உயிரிழந்து விட்டதாக அங்கு அறிவிக்கப்பட்டது.

திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment