Monday, June, 04, 2012இலங்கை::கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் அமுல்படுத்தக்கூடியவற்றை விரைவாக அமுல்படுத்துமாறு அரசாங்கத்துக்கு யோசனை வழங்கியுள்ளதாகவும்;. சர்வதேச சமூகத்தை திருப்திபடுத்துவதற்காகவன்றி உள்நாட்டு மக்களின் நலன்கருதி இதனை முன்னெடுக்கவேண்டும் எனவும் முன்னாள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் யோசனைகளை அமுல்படுத்துவது குறித்து ஆளும் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் யோசனைகளை வழங்குமாறு அண்மையில் கோரப்பட்டிருந்தது. அது தொடர்பில் அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் கட்சியான லங்கா சம சமாஜ கட்சியின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனையில் இந்த விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அவர் இவ்விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில், கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் யோசனைகளை அமுல்படுத்துவது குறித்து ஆளும் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் கருத்துக்களை வழங்குமாறு அண்மையில் அரசாங்கத்தினால் கோரப்பட்டிருந்தது. அது தொடர்பில் ௭மது கட்சியான லங்கா சம சமாஜ கட்சியின் சார்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அந்த யோசனையின் பிரகாரம் கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் அமுல்படுத்தக்கூடியவற்றை விரைவாக அமுல்படுத்துமாறு அரசாங்கத்துக்கு யோசனை வழங்கியுள்ளோம்.
அதாவது நல்லிணக்க ஆணைக்குழு பல்வேறு விதமான யோசனைகளையும் சிபார்சுகளையும் முன்வைத்துள்ளது. அவற்றில் அனைத்தையும் அமுல்படுத்த முடியாத நிலைமைகள் காணப்படலாம்.
ஆனால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் அமுல்படுத்த முடியுமானவற்றை விரைவாக அமுல்படுத்துமாறே நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு விரைவாக பரிந்துரைகளை அமுல்படுத்துவதன் மூலம் சர்வதேச மட்ட அழுத்தங்களை தவிர்க்க முடியும். ஆனால் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்துவதற்காக நாம் பரிந்துரைகளை அமுல்படுத்தவேண்டும் என்ற அவசியம் இல்லை.
மாறாக எமது நாட்டில் சிங்கள தமிழ் முஸ்லிம் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாகவும் அனைத்து உரிமைகளையும் பெறும் வகையிலும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டியது ௭மது கடமையாகும். அதனாலேயே இதனை முன்னெடுக்குமாறு கூறுகின்றோம் என திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment