Wednesday, June 20, 2012புதுடெல்லி::ஜனாதிபதி தேர்தலில், யாரை ஆதரிப்பது என்பதை முடிவு செய்ய இயலாமல், தேசிய ஜனநாயக கூட்டணி திணறி வருகிறது. கூட்டணி கட்சிகள், ஆளாளுக்கு முரண்பட்டு நிற்பதால், எந்த முடிவை எடுத்தாலும், அது, மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், ஆலோசனை கூட்டம் நடத்தக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மம்தா கிளப்பிய புயலால், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுமோ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள், கலகமே ஏற்பட்டுள்ளது. பிரணாப் முகர்ஜியை வேட்பாளராக அறிவித்த கையோடு, அவரை எப்படியும் போட்டியில்லாமல், ஒருமனதாக தேர்ந்தெடுக்க வைக்கும் முயற்சியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி களம் இறங்கி விட்டது. மம்தாவின் ஆதரவை பெறும் நடவடிக்கைகளையும், காங்கிரஸ் முடுக்கி விட்டுள்ளது. ஆனால், எதிர் தரப்பான தே. ஜ., கூட்டணிக்குள், குழப்பத்திற்கு மேல் குழப்பமாக ஏற்பட்டு, என்ன செய்வது என்றே தெரியாத அளவுக்கு, திணறல் ஏற்பட்டுள்ளது.
சிவசேனா உறுதி: "அப்துல் கலாம் தேர்தலில் நிற்க சம்மதிப்பார், அவரை ஆதரிக்கலாம்' என, பா.ஜ., நம்பிக்கையுடன் காத்திருந்தது. ஆனால், கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம், இதை ஏற்கவில்லை. தவிர, "தான் போட்டியிட விரும்பவில்லை' என, கலாமே அறிவித்து விட்டதால், நிலைமை தலைகீழாக மாறியது. கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றும், ஆளுக்கொரு திசையில் சிந்திக்க ஆரம்பிக்கவே, அனைவரையும் கட்டி இழுத்துச் செல்ல, பா.ஜ.,வால் முடியவில்லை. ஐ.ஜ., தளமும், சிவசேனாவும், பிரணாப்பை ஆதரிக்க வேண்டுமென, தே.ஜ., ஆலோசனைக் கூட்டத்தில், கறாராகச் சொல்லி விட்டன. அகாலி தளமும், பிரணாப்புக்கு ஆதரவு தெரிவித்தாலும், கூட்டணி பார்த்து என்ன முடிவெடுக்கிறதோ, அதற்கு கட்டுப்படுவதாக கூறியுள்ளது. இந்நிலையில், நேற்று, தன் அதிகாரப்பூர்வ பத்திரிகையான, "சாம்னா'வில், சிவசேனா வெளிப்படையாகவே பிரணாப் முகர்ஜியை ஆதரித்து விட்டது.
அக்கட்சி எம்.பி.,யான சஞ்சய் ராவத் கூறுகையில், ""கலாம் போட்டியிட்டு இருந்தால், அது நியாயம். அவர் இல்லை என்ற சூழ்நிலையில், பிரணாப்பை எதிர்த்து, வேறு யார் போட்டியிட்டாலும், அது தமாஷ் ஆகிவிடும். தே.ஜ., கூட்டணியில் தான், சிவசேனா நீடிக்கும். ஆனாலும், பிரணாப்பை ஆதரிக்கும்,'' என்றார்.
புதிதல்ல: சிவசேனா இப்படி பிளேட்டை மாற்றிப் போடுவது ஒன்றும் புதிதல்ல. எதிர் கூட்டணி வேட்பாளர்களான பிரதிபா பாட்டீலையும், அதற்கு முன்பாக சேஷனையும் கூட, ஏற்கனவே ஆதரித்த கட்சி தான் இது. ஐக்கிய ஜனதா தளமும், தன் பங்கிற்கு குட்டையை குழப்பி விட்டுள்ளது. 2014ம் ஆண்டு பொதுத் தேர்தலில், பிரதமர் வேட்பாளர் யார் என்பதை, இப்போதே அறிவிக்க வேண்டுமென்று, நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். பத்திரிகை பேட்டி ஒன்றின் மூலம், இவர் போட்டுள்ள வெடிகுண்டால், தே.ஜ., கூட்டணி திக்குமுக்காடிப் போய் உள்ளது. மேலும், அந்த வேட்பாளர், மத சார்பற்றவராக இருக்க வேண்டுமென்றும், நிதிஷ் தெரிவித்துள்ளது, நிச்சயம் மோடியை கருத்திற்கொண்டு தான். இப்பிரச்னை மேலும் தீவிரம் அடையும்போது, கூட்டணிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. எதிர் கூட்டணிக்குள் நடக்கும் இந்த நெருக்கடிகள், குழப்பங்கள் எல்லாமே, காங்கிரசுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளன.
உயர்மட்ட குழு கூட்டம்: நேற்று முன்தினம் இரவு, பா.ஜ.,வின் உயர்மட்டக் குழு கூட்டம், நிதின் கட்காரி வீட்டில் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு துவங்கிய அந்தக் கூட்டம், நள்ளிரவு 12 மணி வரை நடந்தும் கூட, எந்தவொரு உருப்படியான முடிவும் எடுக்கப்படவில்லை. காங்கிரஸ் எதிர்ப்பை எல்லாம், ஒருமுகப்படுத்த வேண்டிய நிலையில், இப்படி கோட்டை விடுகிறோமே என்ற கவலையை, முக்கிய தலைவர்கள் பலரும் பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது. இந்த ஜனாதிபதி தேர்தலில், இதை செய்யத் தவறினால், அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக, மூன்றாவது அணி உருவாக வாய்ப்புள்ளது. காங்கிரசின் பிரதான எதிரி, பா.ஜ.,தான் என்ற தகுதியை இழந்து, வேறு சில கட்சிகள் ஒன்று சேர்ந்து, எதிர்க்கும் சூழ்நிலை உருவாகுமே என்று, அச்சத்திலும், குழப்பத்திலும், பா.ஜ., சிக்கி தவிக்கிறது.
"டம்மி' வேட்பாளர்: இதுவரை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில், இரண்டே இரண்டு முறை தான், உண்மையான போட்டி நடந்துள்ளது. ஜாகிர் உசேனை எதிர்த்து, சுப்பாராவ் போட்டியிட்ட போதும், வி.வி.கிரியை எதிர்த்து, சஞ்சீவரெட்டி போட்டியிட்ட போதும் மட்டுமே, நிஜமான போட்டி இருந்தது. மற்ற தேர்தல்கள் எல்லாமே, அடையாளத்திற்காக நடத்தப்பட்டவையே. அதைப்போல, இம்முறை அடையாளத்திற்காகவாவது போட்டியிட்டாக வேண்டும். அதைக் கூட செய்ய முடியாமல், பிரணாப் முகர்ஜியை எதிர்த்து, டம்மியாகக் கூட வேட்பாளர் நிறுத்த முடியாமல், தே.ஜ., கூட்டணிக்கு கையறு நிலை உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கலகமே உருவாகும்: மம்தா கிளப்பிய புயலால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் புயல் வீசி, அந்த கூட்டணி பலம் இழந்து, மத்திய அரசே கூட கவிழும் என அஞ்சப்பட்டது. ஆனால், தற்போது, நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. எதிர்முகாமான தே. ஜ., கூட்டணிக்குள் எழுந்துள்ள குழப்பம் காரணமாக, இந்த ஜனாதிபதி தேர்தலை காட்டிலும், அடுத்த பொதுத் தேர்தலுக்குள், பெரும் கலகமே ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சங்மாவை சரிக்கட்டும் காங்கிரஸ்: இதற்கிடையில், சங்மாவும் கூட, தேர்தலில் நிற்பாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ், சங்மா விஷயத்தில், தீவிர நிலைப்பாட்டை எடுத்துள்ளது. தவிர, காங்கிரசும் கூட, சங்மாவை அணுகியுள்ளதாக தெரிகிறது. சரத் பவார் மூலமாக, சங்மாவை பல விஷயங்களில் சரிக்கட்டவும், காங்கிரஸ் தயாராகி விட்டது. அதற்கும் மசியாமல் போட்டியிடுவார் எனில், அவரை கட்சியை விட்டு நீக்குவது என்ற மிரட்டல் ஆயுதத்தை, பவாருடன் இணைந்து, காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது. வெகு விரைவில், சங்மாவின் கதை தொடருமா அல்லது முற்றுப்புள்ளி விழுமா என்பது தெரிந்துவிடும். ஒருவேளை, சங்மாவும் போட்டியிடவில்லை எனில், பிரணாப்பை எதிர்க்கத் தயாராக இருக்கிறேன் என பேட்டியளித்த, ராம்ஜெத் மலானியையும், தன் பரிசீலனையில், பா.ஜ., வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment