Wednesday, June 20, 2012இலங்கை::கிழக்கு மாகாண சபை கலைக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி அம்பாறையைச் சேர்ந்த வாக்காளரான கே.கே.பி.அமரசிங்க என்பவர் தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் எஸ்.ஸ்கந்தராஜா மற்றும் நீதிபதி தீப்பாலி விஜேசுந்தர ஆகியோர் முன்னிலையில் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது மனுதாரர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள மேன்முறையீடுகளில் திருத்தம் மேற்கொள்வதற்கு அனுமதியளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கான அனுமதியை வழங்கிய நீதிமன்றம், மனுமீதான பரிசீலனையை ஜூலை மாதம் 11 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.
மனுவில் முதலாவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தன் உள்ளிட்ட மாகாண சபை அமைச்சர்கள் இன்று நீதிமன்றத்தில் பிரசன்னமாகி இருந்தனர்.
கிழக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் அதனை கலைப்பதற்கு இடமளிக்க வேண்டாம் என மனுதாரர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாகாண சபையை உரிய காலத்திற்கு முன்னதாக கலைப்பதற்கு இடமளிக்கக் கூடாது எனத் தெரிவித்து கிழக்கு மாகாண சபையின் அனைத்து உறுப்பினர்களினதும் இணக்கப்பாடுடன் ஏற்கனவே தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment