Saturday, June, 09, 2012புதுடெல்லி::கருப்பு பணத்துக்கு எதிராக பாபா ராம்தேவ் ஆரம்பித்துள்ள போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்ற ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. கருப்பு பணத்துக்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவ் போராட்டம் தொடங்கியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் 4ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில்காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார். அன்று நள்ளிரவு போலீசார் மைதானத்துக்குள் அதிரடியாக நுழைந்து ராம்தேவை கைது செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் கடந்த 3ம் தேதி டெல்லியில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். இதில் அன்னா ஹசாரேவும் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ராம்தேவ் ஆதரவு திரட்டினார். முதல்கட்டமாக பா.ஜ. தலைவர் நிதின்கட்கரியை சந்தித்தார். இதை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை சந்தித்து ஆதரவு கோரினார். இது காங்கிரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சி தலைவர் அஜித்சிங்கை ராம்தேவ் சந்தித்தார். அப்போது ராம்தேவின் கருப்பு பண போராட்டத்துக்கு அஜித்சிங் ஆதரவு தெரிவித்தார். வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இது தொடர்பாக பேசுவதாக அஜித்சிங் அறிவித்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘தேர்தலில் கருப்பு பணம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது மிக முக்கியமான பிரச்னையாகும். வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை விட உள்நாட்டில் அதிகமாக மறைத்து வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
No comments:
Post a Comment