Saturday, June, 09, 2012புதுக்கோட்டை::அதிமுக வேட்பாளரை ஆதரித்து புதுக்கோட்டையில் முதல்வர் ஜெயலலிதா இன்று தீவிர பிரசாரம் செய்தார். தெருத்தெருவாக வேனில் சென்று ஆதரவு திரட்டினார். நாளை மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைவதால் தேமுதிக உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை சட்டசபை தொகுதிக்கு வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மே 18-ம் தேதி தொடங்கி, 25-ம் தேதி முடிந்தது. அதிமுக, தேமுதிக, ஐஜேகே மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
திமுக, இந்திய கம்யூ, பாமக, மதிமுக, பா.ஜ உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தேர்தலை புறக்கணித்து விட்ட நிலையில், இங்கு அதிமுகவுக்கும், தேமுதிகவுக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டமானுக்கு ஆதரவாக 32 அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், நடிகர், நடிகைகள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் ஆகியோரும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.
தேர்தல் பிரசாரத்துக்காக முதல்வர் ஜெயலலிதா இன்று புதுக்கோட்டை வந்தார். சென்னையில் இருந்து தனி விமானத்தில் பகல் 12 மணிக்கு திருச்சி வந்த ஜெயலலிதா, அங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டை சென்றார். நகர எல்லையான பாலன் நகரில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் தலைமையில் முதல்வருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து ஆலங்குடி வழியாக புதுப்பட்டிக்கு வந்த ஜெயலலிதா, பின்னர் வேனில் இருந்தபடி பிரசாரத்தை துவக்கினார். வழிநெடுக திரண்டிருந்த பொதுமக்களிடம் அவர் வாக்கு சேகரித்தார். மழையூர், செம்பட்டி விடுதி நால்ரோடு, மாத்தூர், இச்சடி, பிருந்தாவனம், திருக்கோகர்ணம் மியூசியம், அண்ணா சிலை ஆகிய இடங்களில் மாலை வரை பிரசாரம் செய்கிறார்.
மாலை 5.15 மணியளவில் டிவிஎஸ் கார்னர் பகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்துவிட்டு, ஆயுதப்படை வளாக ஹெலிபேடில் இருந்து ஹெலிகாப்டரில் சென்னை புறப்பட்டு செல்கிறார். முதல்வரின் வருகையையொட்டி புதுக்கோட்டையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவர் பிரசாரம் செய்த இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. முதல்வரின் பிரசாரம் முழுவதும் தேர்தல் கமிஷனால் வீடியோ எடுக்கப்பட்டது. தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேனுக்கு ஆதரவாக 27 எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் மாநில நிர்வாகிகள் மும்முரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். விஜயகாந்த் மனைவி பிரேமலதாவும் 4 நாட்களாக தேமுதிவுக்கு ஆதரவு திரட்டினார்.
கட்சித் தலைவர் விஜயகாந்த் கடந்த 3 நாட்களாக தொகுதியில் முகாமிட்டு ஜாகீர் உசேனுக்கு வாக்கு சேகரித்தார். மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனும் தேமுதிகவை ஆதரித்து பிரசாரம் செய்தார். நாளை மதியம் நடக்கும் தேமுதிக பிரசார நிறைவு பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த், பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். நாளை மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால், வேட்பாளர்கள், அவர்களது கட்சி நிர்வாகிகள் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பிரசாரம் முடிந்ததும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 12-ம் தேதி வாக்குப்பதிவும் 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.
தொகுதியில் 224 வாக்குச்சாவடிகள், 3 வாக்கு எண்ணும் மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்குள் தலைமை தேர்தல் அலுவலர் மட்டுமே செல்போன் பயன்படுத்த வேண்டும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து உடனே வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தேர்தல் அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் தொகுதி முழுவதும் துணை ராணுவத்தினர், போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
தேமுதிக அலுவலகம் எரிப்பு
வாராப்பூர் பகுதியில் அதிமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக வந்த தகவலையடுத்து தேமுதிகவினர் நேற்று மாலை அங்கு முற்றுகையிட்டனர். இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பண பட்டுவாடா குறித்து போலீசாருக்கும், பறக்கும் படையினருக்கும் தேமுதிகவினர் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்றிரவு 11 மணிக்கு வாராப்பூரில் உள்ள தேமுதிக தேர்தல் அலுவலகத்தில் எம்எல்ஏ பாண்டியராஜன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இருந்தனர். அப்போது அங்கு வந்த சிலர், அலுவலகத்தை கொளுத்திவிடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பட்டி விடுதி போலீசில் புகார் செய்ய தேமுதிகவினர் சென்றனர். திரும்பி வந்தபோது அலுவலகம் எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து ஏராளமான தேமுதிகவினர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட நிர்வாகி துரை காமராஜ் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment