Sunday, June, 24, 2012மானேசர்::அரியானா மாநிலத்தில் 70 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 4 வயது சிறுமியை, 80 மணி நேர போராட்டத்துக்கு பிறகு இறந்த நிலையில் ராணுவத்தினர் மீட்டனர். அரியானா மாநிலம் குர்கான் அருகில் உள்ளது கோ கிராமம். இங்கு வசிப்பவர் நீரஜ் உபாத்யாயா. இவரது மனைவி சோனியா. இவர்களது மகள் மஹியின் 5வது பிறந்த நாள் விழா கடந்த புதன்கிழமை மாலை கொண்டாடினர். உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க, மற்ற குழந்தைகளுடன் மஹி வீட்டுக்கு அருகில் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது யாரும் எதிர்பாராத விபரீதம் நடந்துவிட்டது. ஆழ்துளை கிணற்றுக்காக தோண்டப்பட்டிருந்த குழிக்குள் மஹி விழுந்து விட்டாள். மற்ற குழந்தைகள் பயத்தில் அலற, சத்தம் கேட்டு எல்லோரும் வெளியில் ஓடி வந்தனர். மகள் குழிக்குள் விழுந்துவிட்டதை அறிந்து நீரஜ்ஜும் சோனியாவும் அலறினர். உடனடியாக போலீசுக்கும் தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுமி விழுந்த இடத்தில் குர்கான் போலீஸ் இணை கமிஷனர் அனில் ராவ் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். இரவு நேரமாகி விட்டதால் செய்வதறியாமல் திகைத்தனர். முதல்வர் பூபிந்தர் சிங் வரை தகவல் பரவ, அவசரமாக ராணுவ மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படை, உள்ளூர் போலீசார், ராணுவ வீரர்கள், தீயணைப்புப் படை வீரர்கள் என எல்லோரும் குழந்தையை மீட்க களம் இறங்கினர். இன்ஜினியர்களும் வரவழைக்கப்பட்டனர்.
உடனடியாக அக்கம் பக்க வீட்டில் வசித்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். அதற்குள் தகவல் அறிந்து பத்திரிகை, டிவி நிருபர்கள், கேமராமேன்கள் கோ கிராமத்தில் குவிந்தனர். சிறுமி விழுந்த குழியின் அகலம் குறைவாக இருந்தது. மேலும் 70 அடி ஆழம் இருந்தது. உடனடியாக குழிக்குள் பைப் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. ஆனால், தண்ணீர், உணவு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையில் குழிக்கு அருகிலேயே மற்றொரு பள்ளம் தோண்டும் பணி தொடங்கியது. ராட்சத இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு கவனமாக பள்ளம் தோண்டப்பட்டது. அதற்குள் வெயில் 111 டிகிரி அளவுக்கு சுட்டெரித்தது. மேலும் சூறாவளி காற்றில் புழுதி பறந்தது. இதனால் மீட்புப் பணியை விரைந்து செய்ய முடியவில்லை. எனினும் மனம் தளராமல் ராணுவ வீரர்களும், நிபுணர்களும் பள்ளம் தோண்டி கொண்டிருந்தனர். 50 அடிக்கு கீழ் பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் திடீரென பாறை இருந்ததால் மீட்புப் பணி ஸ்தம்பித்தது. இயந்திரங்கள் கொண்டு பாறையை உடைத்தால், சிறுமி இருக்கும் குழியில் மண் சரிவு ஏற்படும் என்று அஞ்சப்பட்டது. அதனால் முடிந்த வரை ராணுவ வீரர்கள் கைகளாலேயே பாறையை சிறிது சிறிதாக உடைத்து எடுத்தனர். பதற்றமான நிலையில் இன்று காலை மீட்டனர். மீட்க்கப்பட்ட சிறுமி மகி இறந்துவிட்டதாக மருத்தவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment