Thursday, June 21, 2012

யாருடைய பதவி பறிபோகுமோ? ஜெயலலிதா எச்சரிக்கையால் கவுன்சிலர்கள் கலக்கம்!

Thursday, June, 21, 2012
சென்னை::வசூல் வேட்டையில் ஈடுபடும் கவுன்சிலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா விடுத்த எச்சரிக்கையால் சென்னை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் கலக்கத்தில் உள்ளனர். யாருடைய பதவி எப்போது பறிபோகுமோ என்று கட்சியினரிடையே பட்டிமன்றமே நடக்கிறது. சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் வசூல் வேட்டை குறித்து முதல்வருக்கு அடுக்கடுக்கான புகார்கள் சென்றன. இதையடுத்து, சென்னையில் நேற்று முன்தினம் அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தை முதல்வர் திடீரென கூட்டினார். மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் யாருமே கூட்ட அரங்குக்குள் அனுமதிக்கப்படவில்லை. முதல்வர் வந்ததும் கூட்ட அரங்கத்தின் கதவுகள் மூடப்பட்டன.

தவறு செய்யும் கவுன்சிலர்கள் ஒரு மாதத்திற்குள் திருந்தாவிட்டால் சென்னை மாநகராட்சியை கலைத்து விடுவேன்’’ என்று முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளது கவுன்சிலர்களிடையே கிலியை ஏற்படுத்தி உள்ளது. மேயர், துணைமேயர் தவிர அனைத்து கவுன்சிலர்கள் மீதும் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளதால் அந்தந்த கவுன்சிலர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

அதிமுக கவுன்சிலர்கள் இல்லாத 30 வார்டுகளில் உள்ள கட்சியின் வட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் மீதும் புகார்கள் உள்ளது. இதனால் அவர்களும் பயத்தில் உள்ளனர். மேலும், சுமார் 45க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் மற்றும் மண்டல குழு தலைவர்கள் மீது பெரிய அளவில் புகார்கள் உள்ளதால், அவர்கள் எந்த நேரத்தில் பதவி பறிக்கப்படுமோ என்று அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

No comments:

Post a Comment