Monday, June 18, 2012

யாழ் மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து இருவேறு மார்க்கங்களுக்கான போக்குவரத்துச் சபையின் புதிய பேரூந்து சேவைகளை ஆரம்பித்து வைத்தார்-டக்ளஸ் தேவானந்தா!

Monday, June, 18, 2012
இலங்கை::யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து இருவேறு மார்க்கங்களுக்கான இலங்கை போக்குவரத்துச் சபையின் புதிய பேரூந்து சேவைகளை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து சங்குப்பிட்டி ஊடாக மன்னாருக்கும் கொழும்புத்துறைக்குமாக இரண்டு புதிய பேரூந்து சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

குறிப்பிட்ட பகுதிகளுக்கான பேரூந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இருந்த நிலையில் மக்களின் போக்குவரத்தைக் கருத்திற் கொண்டும் இலகுபடுத்தும் நோக்கிலுமாக ஆரம்பிக்கப்பட்ட இச் சேவையினூடாக பயணிகள் இலகுவான சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்துகளுக்கான நாடாக்களை வெட்டி அவற்றின் சேவைகளையும் அமைச்சர் அவர்கள் சம்பிரதாயப்பூர்வமாக யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அவர்கள் இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளர் அஸ்கர் நெடுந்தீவு பிரதேச சபைத் தவிசாளர் ரஜீவ் ஆகியோர் உடனிருந்தனர்.

இதனிடையே மத்திய பேரூந்து நிலையத்திற்குச் சொந்தமான மலசலகூடங்களின் சுத்தம் சுகாதாரம் தொடர்பிலும் அமைச்சர் அவர்கள் ஆராய்ந்தறிந்து கொண்டார்...

வடமாகாணத்தில் இந்திய அரசின் உதவித் திட்டங்கள்!

எதிர்வரும் ஓரிரு மாதங்களில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்தியத் துணைத்தூதுவர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் இன்றையதினம் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்டத்தில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு இந்திய அரசின் நிதியுதவியுடன் துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் வடமாகாணத்தில் யுத்தத்தின் பின்னர் மீளக் குடியேறிய வறிய நிலையில் உள்ள குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு பத்தாயிரம் துவிச்சக்கர வண்டிகளை வழங்குவதற்கு இந்திய அரசு முன்வந்துள்ளது.

இதன் பிரகாரம் வறிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு தலா பதினான்காயிரம் ரூபா பெறுமதியான ஆண்கள் பெண்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்படும் அதேவேளை யுத்தத்தின் போது அழிவடைந்த பொதுமக்களின் வீடுகளினதும் கட்டிடங்களினதும் புனரமைப்புக்கென இந்திய அரசு நிதியுதவி வழங்கியுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கென ஏற்கனவே 30 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளதாகவும் கிளிநொச்சியில் விவசாய மற்றும் பொறியியல் பீடங்களை அமைப்பதற்கு 500 மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் இந்திய அரசினால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கமைவாக தாமதப்பட்டிருந்த இந்திய வீட்டுத்திட்டப் பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் ஐந்து நிறுவனங்களுக்கூடாக தொடங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் உறுதிபடத்தெரிவித்த அவர் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக இந்திய அரசு மென்மேலும் பல்வேறு உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் உறுதிமொழி வழங்கினார்.

இந்திய அரசின் இவ்வாறான உதவித்திட்டங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கோரிக்கைக்கு அமைவாகவே கிடைக்கப் பெறுவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இங்கு உரையாற்றிய ஈபிடிபியின் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்கள்

யுத்தம் முடிவுற்றதன் பின்னரான காலப்பகுதியில் இந்திய அரசு எம் மக்களுக்கு ஏராளமான உதவித்திட்டங்களை வழங்கியுள்ளது. மக்கள் மீள்குடியேறிய காலத்தில் தற்காலிக குடியிருப்புக்களை அமைப்பதற்கான கூரைத்தகடுகளை வழங்கியது. அதைத் தொடர்ந்து அழிந்து போன பாடசாலைகளை மீளமைத்து எமது மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பல மனிதாபிமான உதவிகளை செயற்படுத்தியுள்ளது. மேலும் யுத்த அனர்த்தத்தால் பாதிப்புக்களை எதிர் கொண்ட வர்த்தகர்களின் நன்மைகருதி வர்த்தக மையங்களை மீளமைப்பதற்கும் நிதியுதவிகளை வழங்கி வருகின்றது

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தின் காரணமாக இருபத்தையாயிரத்திற்கும் அதிகமான வீடுகள் முற்றாக அழிந்து போயின ஆனால் மக்கள் மீள்குடியேறி மூன்று வருடங்களை எட்டுகின்ற நிலையில் இன்றுவரை எட்டாயிரத்தி எண்னூறு வீடுகளை மட்டுமே அமைத்துக் கொடுக்க முடிந்துள்ளது இந்நிலையில் ஏற்கனவே இந்திய அரசாங்கத்தால் வாக்குறுதியளிக்கப்பட்ட வீட்டுத்திட்டம் நடைமுறைக்கு வரவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் எம்மக்கள் காத்திருக்கின்றனர். ஆனால் அடுத்து வருகின்ற மிகக்குறுகிய நாட்களுக்குள் அத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் இந்திய அரசாங்கம் துரிதமாக ஈடுபட்டு வருகின்றமை எம் மக்களுக்கு ஆறுதலளிக்கும் செய்தியாகவே அமைந்துள்ளது. எனவே எம்மக்களின் எதிர்பார்ப்பை விரைவில் நிறைவேற்ற இங்கு வருகைதந்திருக்கும் இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கம் அவர்கள் நடவடிக்கையெடுப்பார் என நாம் நம்புகின்றோம்;.

இவை அனைத்துக்கும் மேலாக கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியின் பயனாக கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர்பகுதியில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் பொறியியல் பீடங்களை நிறுவ அரசாங்கம் முன்வந்துள்ளது. எனவே இதற்குத்தேவையான நிதியினை வழங்குவதற்கும் இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது. எனவே இந்தியா தொடர்ச்சியாக எம்மக்களுக்கு பல உதவித்திட்டங்களை வழங்கி வருகின்றமைக்கும் அந்நாடு எம்மக்கள் மீது கொண்டுள்ள கரிசனைக்கும் எம்மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியும் உரைநிகழ்த்தினார்.

இறுதியில் ஒரு தொகுதி பயனாளிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

No comments:

Post a Comment