Monday, June, 18, 2012சென்னை::காலையில் மேடையில் சவால் விட்டு பேசிவிட்டு, மாலையில் ஜகா வாங்கும் சவடால் பேர்வழிகளை உலகம் ஏற்காது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 1006 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கும் விழா, திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் அருகே இன்று நடந்தது. விழாவுக்கு சபாநாயகர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி வரவேற்றார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் வாழ்த்துரை வழங்கினார்.
தாலி எடுத்து கொடுத்து 1006 ஜோடிகளுக்கு திருமணங்களை முதல்வர் முதல்வர் ஜெயலலிதா நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது:
தமிழக அரசு சார்பில் 1006 குடும்பங்களில் இன்று விளக்கேற்றி வைக்கப்பட்டுள்ளது. இன்று நடந்த திருமணங்கள் சாதி, பேதமின்றி ஒரே இடத்தில் நடந்த சமத்துவ திருமணங்கள். மணமக்களுக்கு 4 கிராம் தங்க தாலி, 6 கிராம் எடையுள்ள 4 மெட்டிகள், முகூர்த்த புடவை, ஜாக்கெட், ஜரிகை வேட்டி, துண்டு, சட்டை உள்ளிட்ட 28 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இல்லற வாழ்வு இனிமையாக இருக்க வேண்டும் என்றால் சலனமில்லாத, விசாலமான மனம் வேண்டும். பொறுமை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். இன்றைக்கு பல குடும்பங்களில் அர்த்தமில்லாத சண்டைகள்தான் அதிகம் நடக்கின்றன. (அப்போது வாங்காத மாட்டுக்கு சண்டை போட்ட கணவன், மனைவி கதையை ஜெயலலிதா கூறினார்.) இப்படித்தான் அர்த்தமே இல்லாமல் சிலர் சண்டை போடுகின்றனர். இல்லறத்தை வீணாக்கி கொண்டிருக்கிற மனிதர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். வாழ்க்கை என்பது ஒரு சவால். இந்த சவால்களை எதிர்கொள்ளும் தெளிவை நீங்கள் பெற வேண்டும்.
சவால்களை எதிர்த்து நின்று போராடும் மனிதர்கள்தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களைத்தான் சமூகம் வரவேற்கும். ஆனால் காலையில் மேடையில் சவால் விட்டு பேசி, மாலையில் ஜகா வாங்குபவர்களை சவடால் பேர்வழிகள் என்றுதான் உலகம் சொல்லும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார். அறநிலை மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராம் நன்றி கூறினார். விழாவில் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மணமக்களின் உறவினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment