Monday, June, 18, 2012சென்னை::தமிழக அரசு கொடுத்த உறுதி மொழியை செயல்படுத்தக் கோரி செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள புலிகளின் ஆதரவாளர்கள் 7 பேர் 4வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் மொத்தம் 32 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 29 பேர் கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் இனப் படுகொலைக்கு பயந்து தமிழகம் வந்தவர்கள். மற்ற மூன்று பேர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்கள். அந்த முகாமில் உள்ள 29 இலங்கை தமிழர்களில் 8 பேர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. மீதமுள்ள 21 பேர் மீது வழக்குகள் இருக்கின்றபோதிலும் குற்றப்பத்திரிக்கை வழங்காமலும் அல்லது நீதிமன்ற விசாரணைக்கு கொண்டு செல்லப்படாமலும் உள்ளனர்.
இந்த நிலையில் ஜூன் 15ம் தேதிக்குள் 15 பேரை செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், பின்பு ஒவ்வொரு மூன்று மாதத்திலும் 5 பேர் சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
ஆனால் ஜூன் 14ம் தேதி வரை யாரும் விடுதலை செய்யப்படவில்லை என்பதால் தமிழக அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க சிலர் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 15ம் தேதி செந்தூரன் (31), மதன் (34), ஜெயதாசன் (34), சதீஷ் குமார் (28), பராபரன் (39), செல்வராஜ் (42), சேகர்(32) ஆகிய 7 பேர் காலவறையற்ற உண்ணாவிரதப் போரட்டத்தை தொடங்கினர். அவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 4வது நாளாக நீடித்துள்ளது.
No comments:
Post a Comment