Sunday, June 24, 2012

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் தலைவர்கள் இணைந்து புதிய அமைப்பு தொடக்கம்!!

Sunday, June, 24, 2012
சென்னை::இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் தலைவர்கள் இணைந்து புதிய அமைப்பு ஒன்றை சென்னையில் தொடங்கியுள்ளனர்.

புதிய அமைப்பு தொடக்கம்

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, அனைத்து மத, அனைத்து பிரிவு தமிழ் மக்கள் மன்றம் என்ற புதிய அமைப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை-மயிலை பேராயர் ஏ.எம்.சின்னப்பா தலைமையில் இயங்கும் இந்த அமைப்பில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஹைதர்அலி, இந்திய தவ்ஹித் ஜமாத் தேசிய தலைவர் எஸ்.எம்.பக்கர், இந்திய கிறிஸ்துவ மக்கள் கட்சி தலைவர் எப்.ஏ.நாதன், தேசிய லீக் தலைவர் பஷீர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில், தமிழக இந்து துறவியர் பேரவை அமைப்பாளர் சுவாமி சதா சிவனந்தா உள்பட 11 இயக்கங்கள் இணைந்துள்ளன.

இதுகுறித்து, சென்னை-மயிலை பேராயர் ஏ.எம்.சின்னப்பா சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை கண்டிக்க பல்சமய தலைவர்கள் அடங்கிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இலங்கையில் போருக்கு பின்னால், தமிழர்களின் பகுதிகளை மறு கட்டமைப்பு செய்வதாக கூறிய ராஜபக்சேவின் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தேசப் பாதுகாப்பு என்ற பெயரில், தமிழ் பிரதேசங்களில் அதிகளவு ராணுவ மயமாக்கல் திணிக்கப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, வெளிநாடுகள் உதவியோடு கட்டப்படும் வீடுகள் சிங்களர்கள் கையில் கொடுக்கப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளில் 2 ஆயிரத்திற்கும் மேலான இந்து கோவில்களும், 300-க்கும் அதிகமான கிறிஸ்தவ தேவாலயங்களும், மசூதிகளும் இடிக்கப்பட்டுள்ளன.

விசாரணை வேண்டும்

எனவே, ஐக்கிய நாடுகள் சபையும், மத சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக நிறுவப்பட்ட ஆணையமும், உடனடியாக தலையிட்டு, தமிழ் மக்களின் இனப்படுகொலையை ஒடுக்குதல் குறித்தும், திட்டமிட்ட அழித்தொழிப்பு குறித்தும் ஒரு விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இதற்கான நடவடிக்கையில் இந்த அமைப்பு தொடர்ந்து ஈடுபடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment