Sunday, June, 24, 2012சென்னை::இலங்கை அதிபர் ராஜபக்ஷே, தமிழக மீனவர்களை மிரட்டும் தொனியில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. தமிழக மீனவர்கள் பிரச்னையை, பிரதமர் மன்மோகன்சிங் விரைவில் தீர்ப்பார்,'' என, மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
டில்லியில் இருந்து நேற்று காலை, சென்னை வந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி, சென்னை விமான நிலையத்தில் கூறியதாவது: ஜிப்மர் மற்றும் பாண்டிச்சேரி பல்கலைக் கழக விழாக்களில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மன்மோகன்சிங் இரண்டு நாள் பயணமாக, வரும் 29ம் தேதி சென்னை வழியாக புதுச்சேரி வருகிறார்.
மிரட்டுவது சரியல்ல : இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இலங்கை எல்லையில் மீன் பிடித்தால், 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என, தமிழக மீனவர்களை மிரட்டும் தொனியில் பேசியிருப்பது சரியல்ல. ராஜபக்ஷே பேசும்போது, தமிழக, இந்திய மீனவர்கள் என்று குறிப்பிட்டு சொல்லவில்லை. எது எப்படி இருந்தாலும், தமிழக மீனவர்களை இலங்கை ராணுவமோ, கடற்படையோ துன்புறுத்தாமல் இருக்க, பிரதமர் நடவடிக்கை எடுப்பார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா ஆகியோரும், தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். தமிழக மீனவர்கள் பிரச்னையில், பிரதமர் தனி அக்கறை செலுத்தி வருகிறார். பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், இலங்கை சென்று, அதிபர் மற்றும் அதிகாரிகளை சந்தித்துப் பேச உள்ளார். தமிழர்கள் வசிக்கும் பகுதிகளையும், அவர் ஆய்வு செய்யவுள்ளார். இலங்கை அமைச்சர் ஒருவர், "முள்ளி வாய்க்காலில் நடந்தது போல, 100 படுகொலைகள் நடக்கும்' என, பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. பொறுப்பில் இருப்பவர்கள் இப்படி பேசுவதை ஏற்க முடியாது. மத்திய அரசு இதை வன்மையாக கண்டிக்கிறது.
சங்மா விலக வேண்டும் : ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஆலோசிக்காமல், பிரணாப் பெயரை அறிவிக்கவில்லை. சுஷ்மா, அத்வானி, அருண்ஜெட்லி ஆகியோரிடம், பிரதமர் தொலைபேசியில் இதுகுறித்து பேசிய பிறகு தான் அறிவிக்கப்பட்டது. தற்போது, சங்மாவை பா.ஜ., ஆதரிக்கிறது. அவர் பெயரை, அ.தி.மு.க.,வும், - பிஜூ ஜனதா தளமும் இணைந்து தான் அறிவித்தன. பா.ஜ., தலைவர்களிடம் ஆலோசனை நடத்தி, சங்மாவை வேட்பாளராக அறிவிக்கவில்லை. இந்த விஷயத்தில், பா.ஜ., இரட்டை வேடம் போடுகிறது. பிரணாப் வெற்றி உறுதியாகியுள்ளதால், சங்மா போட்டியில் இருந்து விலகி விடுவது நல்லது. சிறுவாணி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு அணை கட்ட உள்ள விவகாரத்தில், ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தை, இரு மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும். நிதி அமைச்சர் பதவி உட்பட, அமைச்சரவை விரிவாக்கம் குறித்து, பிரதமரும், சோனியாவும் கலந்து பேசி விரைவில் முடிவை அறிவிப்பர். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
No comments:
Post a Comment