Monday, June, 04, 2012சென்னை::இலங்கையில் விரைவில் தனி ஈழம் உருவாக வேண்டும் என்பது தான் எனது பிறந்த நாள் செய்தி என்று கருணாநிதி பேசினார்.
பிறந்தநாள் பொதுக் கூட்டம்
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 89-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தென் சென்னை மாட்டம் சார்பில் கே.கே.நகரில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு, தென் சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்கினார். பகுதி கழக செயலாளர் தனசேகரன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் குரலே மகேசன் குரல்
மு.க.ஸ்டாலின் இங்கு கூறியதுபோல பல வெற்றிகளையும், பல தோல்விகளையும் தாங்கியுள்ளோம். தோல்வியை தாங்கிக் கொள்ளும் மனபக்குவம் ஆட்சிக்கும், கட்சிக்கும், தலைவருக்கும் வந்தால்தான் உண்மையான வெற்றி பெறமுடியும். கருணாநிதியின் சிறப்புகளை மட்டும் சொல்லி முடித்துவிட்டார்களே என்று வருத்தப்படக்கூடும். ஆகவேதான் நான் இந்த பொதுக் கூட்டத்தில் உங்களுக்கு ஒன்றை கூறுகிறேன்.
தமிழ்நாட்டின் நிலைமை பற்றி பேசவேண்டாமா? தி.மு.க. அரசு 15 ஆண்டு காலம் ஆட்சி நடத்தி உள்ளது. மக்களை எப்படி மதிக்கவேண்டும் என்றும், மக்கள் குரலே மகேசன் குரல் என்றுதான் பணியாற்றி உள்ளோம். தி.மு.க. ஆட்சி சரியில்லை என்று வசைபாடுபவர்களுக்காக நான் சிலவற்றை கூறுகின்றேன்.
ரூ.18,836 கோடி வரிச்சுமை
நிதிநிலை அறிக்கையில் பல்வேறு விதமான வரிகளை போட்டார்கள். விற்பனை வரியை உயர்த்தினார்கள். பத்திரபதிவு கட்டணம் உயர்வு மூலம் ரூ.300 கோடி அரசுக்கு வருமானம் வருகிறது. பஸ் கட்டண உயர்வு மூலம் ரூ.6 ஆயிரம் கோடிக்கு வருமானம் வருகிறது. பால் விலை உயர்வு மூலம் ரூ.200 கோடி அளவுக்கு வருமானம் வருகிறது.
நிதிநிலை அறிக்கையில் புதிய வரிகள் மூலமாக ரூ.1,500 கோடி போடப்பட்டுள்ளது. நடுத்தர மக்களை வாழவைப்பதற்காக இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்தேன் என்று ஜெயலலிதா கூறுகிறார். தி.மு.க. ஆட்சியில் வரியே இல்லாத பட்ஜெட்டை ஒவ்வொரு ஆண்டும் போட்டிருக்கிறோம். அ.தி.மு.க. அரசு ஒராண்டில் மட்டும் ரூ.18,836 கோடி அளவுக்கு வரிச்சுமையை ஏற்றி விட்டு, ஏழைகள் அரசு என்று கூறுகிறார்கள்.
பெட்ரோல் விலை உயர்வு
ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டில் பல்வேறு வரிகளை மனம்போல் உயர்த்திவிட்டு, மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைக்கவேண்டும் என்று சொல்வதைப் பார்த்து மக்கள் சிரிக்க மாட்டார்களா? தி.மு.க. அன்றும், இன்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. கூட்டணியில் இருந்தாலும், அவர்கள் வரி விதித்தபோதெல்லாம் எதிர்த்திருக்கிறோம்.
தி.மு.க. கொள்கைக்காக போராடும் இயக்கம். லட்சியத்துக்காக உயிரைக் கொடுக்கும் வீரர்கள் நிரம்பிய கூட்டம். இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது காங்கிரசுடன் கூட்டணியில் இருந்தோம். அதே நேரத்தில் இந்திராகாந்தி நெருக்கடி நிலை கொண்டுவந்தபோது எதிர்த்துள்ளோம். இதனால் 800 பேர் சிறைக்கு சென்றிருக்கிறார்கள். ஆளும் கட்சி மக்களுக்கு எதிரான காரியங்களை செய்யும்போதெல்லாம் வெளியேறி இருக்கிறோம்.
பா.ஜ.க.வில் இருந்து வெளியேறினோம்
வாஜ்பாய் அரசு மதசார்புள்ள அரசாக செயல்பட்டதாலும், சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்பட்டதாலும் இதை அனுமதிக்க முடியாது என்று பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறோம். வாஜ்பாய் பாரதீய ஜனதா கட்சியில் யோக்கியமானவர்கள் ஒருவர். அப்படிப்பட்ட அவரது தலைமையையே ஏற்க முடியாது என்று வெளியேறி இருக்கிறோம். மதசார்ப்புடைய அரசாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராக இருந்ததாலும் வெளியேறினோம். மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தி, தற்போது சற்று குறைத்துள்ளது.
குறைத்தது போதாது, இன்னும் குறைக்கவேண்டும் என்று கூச்சல் ஏற்பட்டுள்ளது. டீசல், பெட்ரோல் விலையை உயர்த்துவதற்காக காரணத்தை காங்கிரஸ் அரசு எடுத்துக்கூறியிருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் சாஸ்திரத்துக்காவது, மத்திய அரசு உயர்த்திய வரி மற்றும் விலையை குறைக்கவேண்டும் என்று சொன்னதுண்டா?
டெசோ மாநாடு
தி.மு.க.வை பொறுத்தமட்டில் துணிச்சலுடனும், விவேகத்துடனும் விவாதித்து யாராக இருந்தாலும் மக்களை பாதிக்கும் காரியங்களை செய்தால் தட்டிக் கேட்போம். நமது போராட்டம் என்பது வெற்றி பெற்று ஆட்சியில் அமரவேண்டும் என்பது அல்ல. மக்களுக்காக பாடுபடவேண்டும் என்பதுதான். பாடுபட்டு வளர்த்த தி.மு.க. இயக்கத்தை அடியோடு நாசம் செய்ய ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. இந்த போராட்டம் தேர்தலுக்காக நடக்கும் போராட்டம் அல்ல.
நமது சுயமரியாதையை காப்பாற்றுவதற்காக நடக்கும் போராட்டம் ஆகும். இலங்கையில் சிங்களர் இனம் வேறு, தமிழர் இனம் வேறு என்ற நிலை உள்ளது. தமிழர்களுக்கு சம உரிமையுடன் வாழவேண்டும் என்பதற்காக டெசோ மாநாட்டை மீண்டும் தமிழகத்தில் நடத்தவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறோம். இதை நான் பிறந்தநாள் செய்தியாக சொல்கிறேன். விரைவில் விழுப்புரத்தில் திராவிட முன்னேற்றக்கழகம், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளோடு சேர்ந்து டெசோ மாநாடு நடத்தப்பட உள்ளது. விரைவில் இலங்கையில் தனி ஈழம் உருவாகவேண்டும் என்பதுதான் எனது பிறந்தநாள் செய்தியாகும்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
முன்னதாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், துணைப் பொதுச் செயலாளர்கள் சற்குணபாண்டியன், துரைமுருகன், வி.பி.துரைசாமி, முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி உள்பட பலர் பேசினார்கள்.
விழாவில், மத்திய மந்திரி காந்தி செல்வன், ஜெகத்ரட்சகன், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், நடிகை குஷ்பு, கவிஞர் சல்மா, முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா மேடை
தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா மேடையில் கோபாலபுரத்தில் உள்ள அவரின் அறையில் இருப்பதுபோல் நூலகம் மற்றும் தாயார் அஞ்சுகம்மாள் சிலை ஆகியவை வடிவமைக்கப்பட்டு இருந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்தபோது வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment